காஷ்மீரில் திடீர் திருப்பம்: பாஜகவுடன் கைகோக்க பி.டி.பி. பரிசீலனை

ஜம்மு காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு திருப்பமாக, பாஜகவுடன் கைகோத்து ஆட்சி நடத்த தயக்கம் ஏதும் இல்லை என்று பி.டி.பி. தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க அந்தக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியுடன் (என்சி) இணைந்து கூட்டணி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) முடிவு செய்தது.

இதனால் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்கின்றன. கூட்டணி குறித்து வியூகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் நிலையில் அதற்கான முடிவு ஏற்படாமலே உள்ளது.

இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக, மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாஜக எதிரி அல்ல என்றும் அந்த கட்சியுடன் அணி சேர்ந்து ஆட்சி அமைக்க தயக்கம் இல்லை என்றும் அந்த கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் மாநில ஆளுநர் என்.என்.வோராவை அவர் இன்று (புதன்கிழமை) சந்தித்து பேசினார். ஆளுநருடன் நடத்திய பேச்சு குறித்து வெளிப்படையாக தெரிவிக்காத அவர், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "காஷ்மீர் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆனால் அவர்களது ஆதரவை சற்று பிரித்து வழங்கிவிட்டனர். கூட்டணி எந்த வகையில் அமைந்தாலும் அவை மக்கள் தீர்ப்புக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்.

அப்படி அமைக்கப்படாத கூட்டணி மக்கள் நலனுக்காக செயல்பட முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல ஜம்மு - காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய சவால்கள் உள்ளது. அந்த சவால்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதல் தற்போது மோடி வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது.

பிரதமர் மோடி வளர்ச்சி குறித்து பேசுகிறார். ஆனால் அமைதி நிலவினால் மட்டுமே வளர்ச்சி என்பது தான் ஜம்முவின் நிலை. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நிலைப்பாட்டில் ஆட்சி நடத்த நினைத்தால், ஜம்முவில் அமைதி நிலவுவது சாத்தியமாகாது. பிரதமர் மோடிக்கு மாற்றத்தை ஏற்படுத்த இந்த தேர்தல் முடிவை மக்கள் தங்துள்ளனர்.

வாஜ்பாயி முதலில் அதற்கான வழிகளை செய்தார். ஹூரியத் தலைவர்களுடனும் பாகிஸ்தானுடனும் பேச்சு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஜாஷ்மீருக்கு உரிய நிதி தேவைகள் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் குறைக்கப்பட்டது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி அதனை முழுவதுமாக நீக்கப்பட்டது.

கூட்டணியில் இடம்பெறப்போவது பாஜகவா? காங்கிரஸா? அல்லது என்.சி.பி.யா? என்பது கேள்வி இல்லை. கூட்டணி என்பது மட்டுமே கேள்வி என்றால் அதனை 15 நிமிடத்தில் தீர்மானித்துவிடலாம். மக்கள் நலன் இதில் உள்ளது என்பதே முக்கியமானது. மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

காஷ்மீர் பகுதியில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். அதேப் போல ஜம்முவில் பாஜக பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்" என்றார்.

பி.டி.பி. தலைவர் மெஹபூபா முப்தியின் இந்த கருத்து பாஜக-வுடன் அவரது கட்சி கூட்டணி அமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி அதிகபட்சமாக 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்து பாஜக 25 இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE