பெங்களூரு குண்டு வெடிப்பு விசாரணை: புனே, சென்னைக்கு விரைந்தது தனிப்படை

பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக புனே மற்றும் சென்னை நகரங்களுக்கு கர்நாடக போலீஸ் தனிப்படைகள் விரைந்துள்ளன.

மேலும், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. குண்டுவெடிப்பு விசாரணைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38), காயமடைந்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக், சந்தீப், வினய் ஆகிய மூவர் என அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ், மாநில டி.ஜி.பி. எல்.பச்சாவு, போலீஸ் ஆணையர் எம்.என்.ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும் கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பு குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஜார்ஜ்: "பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் உதவுவர். இந்த சம்பவத்தின் பின்னணி விரைவில் கண்டறியப்படும். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்னை, புனே நகரங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன" என்றார்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் ஆராயப்பட்டுவருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் கூறினர்.

இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.

இதற்கிடையில் பெங்களூரு சம்பவம் தீவிரவாத தாக்குதலே என உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

சிசிடிவி பொருத்துக:

கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநிலத்தின் முக்கிய இடங்களில் எல்லாம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE