குஜராத்தில் 225 கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றம்: விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

By பிடிஐ, ராய்ட்டர்ஸ்

குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் 225 கிறிஸ்தவ பழங்குடியின மக்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றியுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வி.எச்.பி. வல்சாத் மாவட்ட தலைவர் நாது படேல் கூறும்போது, “அரணை கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 225 பேரை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றியுள்ளோம். இவர்கள் அனை வரும் தங்களின் சொந்த விருப் பத்தின் பேரில்தான் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இவர் கள் பூர்விகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த மதமாற்ற நிகழ்ச்சியை யொட்டி மிகப்பெரிய யாகத்தை நடத்தியிருந்தோம். இதில் கலந்து கொண்ட 225 பேருக்கும் பகவத் கீதை புத்தகத்தை அளித்து முறைப்படி இந்து மதத்துக்கு மாற்றியுள்ளோம்” என்றார்.

மதம் மாற்றும் பணி தொடரும்

உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் சில இந்துத்வா அமைப்புகள் ஈடுபடுவதை கண்டித்து நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மதமாற்றம் செய்யும் பணி தொடரும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத் தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

மோகன் பாகவத் கொல்கத்தா வில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி யொன்றில் பேசியதாவது: இந்தியா ஒரு இந்து தேசம். கடந்த காலங் களில் ஏராளமான இந்துக்கள் வேறு மதத்தை தழுவுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர் களாக விரும்பி மதம் மாறவில்லை. அவர்களை பிற மதத்தினர் ஏமாற்றி மதம் மாற்றிவிட்டனர். வழிதவறிச் சென்றுவிட்ட அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு நாங்கள் அழைத்து வருவோம்.

நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்ய விரும்ப வில்லை. அதே சமயம், இந்துக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றுதான் வலியுறுத்து கிறோம். மதமாற்றத்தை விரும்பாதவர்கள், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வர ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

இதற்கிடையே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் கூறும்போது, “கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். கட்டாய மதமாற்றத் தைத் தடுக்க சட்டம் கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE