சாரதா நிதி முறைகேடு: திரிணமூல் தலைவரிடம் அமலாக்கத் துறை விசாரணை

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சங்குதேவ் பாண்டாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு இன்று ஆஜராகுமாறு பாண்டாவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேற்று காலை 11 மணிக்கே ஆஜரானார்.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது, “சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் சங்குதேவ் பாண்டாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற வருமானம் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவரை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சாரதா குழும தலைவர் சுதிப்தா சென் வங்கிக் கணக்கிலிருந்து பாண்டா சுமார் ரூ.15 லட்சம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்குவங்க அமைச்சர் ஷ்யாமபதா முகர்ஜி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஹசன் இம்ரான், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள குணால் கோஷ் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE