ஒசாமாவை கொன்றது போல் தாவூதை கொல்ல முடியுமா? - இந்திய அரசுக்கு சிவசேனா கட்சி கேள்வி

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கொன்றதுபோல், அந்நாட்டில் தற்போது பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை கொல்ல இந்திய அரசுக்கு துணிவு இருக்கிறதா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

தாவூத் இப்ராஹிம், ஹபிஸ் சயீத் உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றனர். இதை நிரூபிப்பதற்கு தனியாக ஆதாரம் ஏதும் தேவையில்லை. பாகிஸ்தானை தவிர வேறு எந்தவொரு நாடும், இதுபோன்று தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தராது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த இருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் தங்கள் நாட்டில் வசிக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை, அந்நாட் டுக்குள் புகுந்து கொன்ற அமெரிக்காவைப் போன்று, தாவூத் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு துணிவு இருக்கிறதா?

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறுகிறது. அதனால், என்ன பயன் ஏற்பட்டுவிடும்?” என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய அரசு சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிவசேனா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 250 பலியானார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தாவூத் இப்ராஹிம் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE