காங்கிரஸ் முழு நேர தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும்: திக்விஜய் சிங் விருப்பம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழு நேர தலைவராக துணைத்தலைவர் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்கவேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தி இருக்கிறார். அண்மையில் நடைபெற்ற தேர்தல் களில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு வரும் நிலையில் திக்விஜய் இந்த யோசனையை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு முழு நேர தலைவராக ராகுல் பதவி ஏற்க வேண்டும் என்பதே கட்சிக்காரர்களின் விருப்பம். எனினும் எப்போதும் போலவே, சோனியா காந்தியே எமது தலைவராக நீடிப்பார். வாய்ப்பு கொடுத்தால் ராகுல் காந்தி சிறப்பாக செயல்படுவார்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் பல பிரமிக்கவைக்கும் வெற்றிகளை கண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் 2 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. 2004லும் 2009லும் மத்தியில் ஆட்சி்க்குவந்தது.இப்போது கட்சியின் பொறுப்பை ராகுல் ஏற்கவேண்டிய காலம் இது.அவருக்கு கட்சியினர் அனைவரும் ஆதரவு தருவார்கள், என்றார் திக்விஜய் சிங்.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும் மகாராஷ்டிரா, ஹரியாணாவில் ஆட்சியை இழந்தது. அதேபோல‌ ஜார்க்கண்டிலும் ஜம்மு காஷ்மீரிலும் நடந்த தேர்தலிலும் கட்சியின் செயல்பாடு பாராட்டும்படி இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE