திருப்பதி மலைவழிப் பாதையில் குன்றுகள் சரியும் அபாயம்: சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு அறிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பதி மலைவழிப் பாதையில் நேற்று சென்னையை சேர்ந்த ஐஐடி நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 4 இடங்களில் குன்றுகள் சரியும் அபாயம் உள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

திருப்பதி மலைவழிப் பாதையில் மழைக் காலங்களில் அடிக்கடி குன்றுகள் சரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலமுறை அபாயத்தை சந்தித்துள்ளனர். சில விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் கூட இரண்டாவது மலைவழிப் பாதையில் குன்று சரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

இந்நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ், இது குறித்து தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதன்பேரில் தேவஸ்தான பொறியாளர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் நரசிம்மராவ் தலைமையிலான நிபுணர் குழுவினர் மலைப்பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து பேராசிரியர் நரசிம்மராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இரண்டாவது மலைவழிப் பாதையில் நடத்திய ஆய்வில் 4 இடங்களில் குன்றுகள் சரியும் அபாயம் உள்ளது. இதில் ஒரு பெரிய குன்றும் உள்ளது. இவற்றை பெயர்த்தெடுக்க வேண்டுமெனில் இந்த பாதையை 3 நாட்கள் வரை மூடவேண்டி வரும். ஆனால் இதை உடனடியாக செய்ய வேண்டியதில்லை” என்றார்.

இந்நிலையில் இந்த அபாயம் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரியவந்துள்ளளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE