பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழக சிபிசிஐடி போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு

கடந்த 28-ம் தேதி பெங்களூரு சர்ச் தெருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சென்னையை சேர்ந்த பவானிதேவி (38) பலியானார். அவருடைய உற‌வினர் கார்த்திக் (21) உட்பட 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அலோக் குமார் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திறன் குறைந்த இந்த டைம் பாம் சென்னை, புனே குண்டுவெடிப்பு சம்பவங்களைபோல உள்ளதால் சிமி, அல்-உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பல மாநிலங்களில் விசாரணை

பெங்களூரு போலீஸ் தனிப்படைகள் தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரித்து வருகின்றனர். அங்கு சிமி, அல்-உம்மா அமைப்புகளுக்கு நெருக்கமானவர்களை பற்றிய தகவல்களை திரட்டியுள்ளனர். பெங்களூரு,மைசூரு,பெலகாவி சிறைகளில் உள்ள அந்த அமைப்புகளின் ஆதரவாளர்களிடம் நேற்று விசாரித்தனர்.

சிமி அமைப்பை சேர்ந்த முகமது அஜாஜுதீன், அம்ஜத், அசீம், ஜாகீர் ஹூசைன், மெகபூப் ஆகிய 5 தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆட்களை வளைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

தமிழக போலீஸார் விசாரணை

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் தமிழக சிபிசிஐடி போலீஸார் நேற்று பெங்களூருவில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த‌னர். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தேசிய புலனாய்வு பிரிவு,மத்திய குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் சம்பவ‌ இடத்தை ஆய்வு செய்தனர்.

யாரும் கைதாகவில்லை

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது,“தனிப்படை போலீஸார் பல இடங்களில்,பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வ‌ருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிசிடிவி கேமரா பதிவுகளில் சிக்கியுள்ள மர்ம மனிதர்கள் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது.

விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்''என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE