பார் உரிமம் பெற லஞ்சம்: அரசியல் தலைவர்களின் பெயர்களை வெளியிட கேரள அமைச்சர் வலியுறுத்தல்

கேரளத்தில் மதுபான ‘பார்’களை மீண்டும் திறப்பதற்கு ரூ.20 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாக பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், லஞ்சம் பெற்றவர்களின் பட்டியலை அவர்கள் வெளியிட வேண்டும் என்று மாநில கலால் துறை அமைச்சர் கே.பாபு கூறினார்.

கேரளத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி 418 பார்களின் உரிமம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

மூடப்பட்ட 418 பார்களை மீண்டும் திறப்பதற்கு மாநில நிதியமைச்சர் கே.எம்.மணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ராஜேஷ் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இப்புகாரை விசாரித்த லோக் அயுக்தா, கே.எம்.மணி குற்றமற்றவர் என அறிவித்தது.

இந்நிலையில் கேரள பார் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வெளிநபர்களுக்கு அனுமதியில்லாத இக்கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20 கோடி வரை வசூலித்து பல்வேறு தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பேசப்பட்டது. இதனை மலையாள டி.வி. சேனல் ஒன்று ரகசியமாக படம்பிடித்து வெளியிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கே.பாபு நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கப்பட்டது என்று பார் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட வேண்டும். பெயர்களை குறிப்பிடாமல் இவர்கள் புகைத்திரையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே பிஜு ரமேஷ் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டை ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும்.புதிய மதுபானக் கொள்கையை நல்ல நோக்கத்துடன் அரசு கொண்டுவந்தது. இதில் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

குற்றச்சாட்டு வாபஸ் இல்லை

இதனிடையே நிதியமைச்சர் கே.எம்.மணிக்கு ரூ.1 கோடி கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெறமாட்டேன் என்று பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ரமேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறும்போது, “மூடப்பட்ட பார்களை மீண்டும் திறக்க கே.எம். மணி ரூ.5 கோடி கேட்டார். அவரிடம் ரூ.1 கோடி தரப்பட்டது. இதை அப்படியே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கூறியுள்ளேன். இது தொடர்பான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் எங்கள் சங்கம் வழங்கும்” என்றார்.

இந்த குற்றச்சாட்டு எழுந்தது முதல் கே.எம்.மணி, செய்தியாளர்களை தவிர்த்து வருகிறார். 1967 முதல் தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் மணி, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவர். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE