ஜனதா கூட்டமைப்பு சீதாராம் யெச்சூரி வரவேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பாஜக அரசுக்கு எதிராக சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி ஜனதா ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளன. இதற்கு மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜனதா கட்சிகள், மீண்டும் ஒரே தளத்தில் இயங்கி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜகவுக்கு எதிராகச் செயல்படுவோம் என அறிவித்துள்ளன. இக்கூட்டமைப்பு மீண்டும் அமையப்பெற்றதை வரவேற்கிறோம். அதேசமயம், இக்கூட்டமைப்பின் கொள்கைகள் குறித்து அவை தெளிவுபடுத்த வேண்டும்.

தேசிய அளவில் அமைக்கப்படும் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணி இடதுசாரி கட்சிகள் இன்றி நீடித்திருக்காது. காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணி எதிர்காலத்தில் வலிமையாக உருப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சோஷலிச, கம்யூனிச கட்சிகள் தேசிய அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபடுவது திருப்தியளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே உள்ளார். அவரின் பேச்சில் செயல்பாட்டுக்கான அறிகுறியே இல்லை. நிலக்கரி போன்ற தேசத்தின் வளங்கள் சார்ந்த துறைகளில் தனியார் மய முயற்சியை அரசு மேற்கொண்டால் அதனை மார்க்சிஸ்ட் கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE