புதிய தொழிலாளர் திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்க்வார் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து இன்று மக்களவையில் அமைச்சர் கங்க்வார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
''மாறி வரும் பொருளாதார சூழ்நிலை, தொழில்நுட்ப முன்னேற்றம், ஊதிய மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் சிறந்த பணிச் சூழலுக்கான தேவை ஆகியவற்றைப் பொறுத்து நமது நாட்டின் மத்திய தொழிலாளர் சட்டங்களையும் மாற்றியமைக்கும் தேவை இருக்கிறது.
தற்போது இருக்கும் தொழிலாளர் சட்டங்களில் 17 சட்டங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருப்பவை. இன்னும் சில சட்டங்கள் 70 ஆண்டுகள் பழமையானவை. தொழிலாளர்களுக்கான இரண்டாவது தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர்களுக்கான புதிய சட்ட விதிமுறைகளை வரைவு செய்துள்ளது.
ஊதிய வரன்முறை, தொழிலக உறவு, தொழில் பாதுகாப்பு, பணியிட சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை இந்தப் புதிய தொழிலாளர்களுக்கான வரைவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. தொழிற்சங்கப் பிரதிநிதிகள், வேலை வழங்குநர்களின் அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியோருடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வரைவு மத்தியத் தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தும் கோரப்பட்டது. இந்த வரைவுகளின் அடிப்படையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்போது பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படும். தொழிலாளர்களுக்கான வரைவில் ஊதிய வரன்முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது.
பிற அம்சங்கள் அமைச்சகத்தின் நிர்வாக நடைமுறையில் இருக்கின்றன. புதிய தொழிலாளர் வரைவின்படி தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், நல வாழ்வு, நிர்வாகங்களுடனான பிரச்சினைகள் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புதிய தொழிலாளர் வரைவு மட்டுமல்லாமல், அரசுத் தொழிலாளர்களுக்கான பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. ‘பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மான் தன் (பிரதமர் ஓய்வூதியத் திட்டம்)’என்ற திட்டம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், சில்லறை வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நலவாழ்விற்காக கொண்டுவரப்பட்ட 'ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா' திட்டத்தின் கீழ், 10.74 கோடி ஏழை மக்களுக்காக ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு செய்யப்படுகிறது.
சமூக, பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரண்டாம், மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சையை இத்திட்டம் உறுதி செய்கிறது''.
இவ்வாறு சந்தோஷ்குமார் கங்க்வார் தெரிவித்தார்.
முன்னதாக, திமுக எம்.பி.யான கனிமொழி தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் வளரும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும், அப்படிப்பட்ட தொழிலாளர் சட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago