சண்டிகர் கிரிக்கெட் மைதானம் ஒரு ‘பிரம்மாண்ட தாற்காலிக சிறை’யாக மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் வளாகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கற்களும் கூரிய ஆயுதங்களும் அதன் மற்றொரு பகுதியில் நிரப்பப்பட்டுள்ளன. சண்டிகர் காவல்துறை அந்த நகரின் அத்தனை நுழைவிடங்களையும் ‘சீல்’ செய்துள்ளது. ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.
எல்லாமே இன்று மதியம் வெளியாகவிருக்கும் ஒரு தீர்ப்பினால் உண்டாகவிருக்கும் விளைவுகளை எதிர்பார்த்துதான். குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவருக்கெதிரான வழக்கு அது. அவர்தான் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர். ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
1948 ஏப்ரல் 29 அன்று தொடங்கப்பட்ட சமூக நல -ஆன்மிக அமைப்புதான் தேரா சச்சா சவுதா. மஸ்தானா பலோசிஸ்தானி என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் 1960-ல் இறந்தார். இந்த அமைப்புக்கு இன்று உலகெங்கும் 46 ஆஸ்ரமங்கள் உள்ளன. மரம் நடுதல், ரத்த தானம், சுகாதார சூழல், ஆதரவற்றோருக்கு உதவி, பூர்வ இனக் குடியினருக்கும் திருநங்கைகளுக்கும் ஆதரவு என்ற மக்களிடையே தன் தொடர்பை அழுத்தமாகப் பதித்தது இந்த அமைப்பு.
குர்மீத் ராம் ரஹீம் சிங் அரசியல் செல்வாக்கு மிக்கவர். இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவர். திருமணமானவர். மூன்று மகள்கள், ஒரு மகனுக்குத் தந்தை. 2014 ஹரியாணா தேர்தலின்போது பாஜகவை ஆதரித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஆதரவு தொடர்ந்தது. இவருடைய பல சமூகப் பணிகள் கின்னஸ் சாதனை நூலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று - அதிகம் பேருக்கு, இதய நோய்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்கோ சோதனை முகாம் நடத்தியது. ஹரியாணாவின் சிர்ஸாவில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையையும் தொடங்க இருக்கிறது இந்த அமைப்பு. ஒரு மருத்துவக் கல்லூரியை ஆறே நாட்களில், ஒரு கிரிக்கெட் மைதானத்தை 42 நாட்களில், 175 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை 17 நாட்களில் என்று மிகக் குறைந்த காலத்தில் இவர் கட்டி முடிக்க, ஒவ்வொன்றும் ஆசிய சாதனை ஆனது.
ஒரு கட்டத்தில் தன்னையே மனித ரூபத்தில் வந்த கடவுளாகச் சித்தரித்துக் கொண்ட இவருக்கு, ஆன்மிக போதனைகள் தாண்டி திடீர் ‘ஸ்டண்ட்’கள் மீதும் ஆசை வந்தது. ‘மெஸஞ்சர் ஆஃப் காட்’ என்ற தலைப்பில் மளமளவென்று ஐந்து சினிமாக்கள் எடுத்துத் தள்ளிவிட்டார். அதில், சில படங்களில் தன் மகளையும் சேர்த்துக் கொண்டார். இயக்கம், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, தொகுப்பு என்று சர்வமும் தானே என்று ‘பொறுப்பேற்று’ கொண்ட வேடிக்கையும் நடந்தது. படத்தின் கதாநாயகன்... வேறு யார்? இவரேதான். இதில் சில படங்களில் யானையையே சுழற்றித் தூக்கி அடிப்பதும், மகா பெரிய பாறையை மண்டையாலேயே உடைப்பதுமாக (‘யு டியூபில்’) பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. பாடல்கள் எழுதி சொந்தக் குரலில் பாடுகிற ஆசையையும் விட்டு வைக்கவில்லை மனுஷர்.
2016-ல் தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு இவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சென்ற ஆண்டின் தலைசிறந்த பன்முகக் கலைஞர் ஆகிய விருதுகளை வழங்கியது. துரோணாச்சார்யா விருதுக்கு சமீபத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார்.
குரு கோவிந்த் சிங் போல உடை அணிந்து ஒரு விளம்பரத்தில் இவர் தோன்றியது சீக்கியர்களிடையே பெரும் மனக் கசப்பை உருவாக்க, டி.எஸ்.எஸ். அமைப்பு மன்னிப்பு கேட்டது. என்றாலும் புகைச்சல் தொடர்கிறது.சரி, இவர் மீதான வழக்கு..?
பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கின் விதை. அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ... பரபரப்பு கூடியது.
மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்பதே பதற்றத்துக்குக் காரணம். முடிவு குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக அமைந்தால் அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு என்பதே அச்சம். ஹரியாணாவைவிட, பஞ்சாப் அரசுக்குக் கூடுதல் தவிப்பு. ஏற்கெனவே குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கும் சீக்கியர்களுக்குடையே கடும் உரசல்கள் உள்ளது. அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை கைதுகள் என்று பரபரப்பாக இருக்கிறது பஞ்சாப் அரசு.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago