உத்தரப் பிரதேச மேலவை உறுப்பினர் சரோஜினி அகர்வால், வெள்ளிக்கிழமை அன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.
இந்த இணைப்பு அமைச்சர்கள் ரிதா பஹுகுனா ஜோஷி மற்றும் மகேந்திர சிங் முன்னிலையில் நடைபெற்றது.
சட்டமேலவைத் தலைவர் ரமேஷ் யாதவின் அலுவலகம், சரோஜினி ராஜினாமா செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
பதவி விலகல் குறித்துப் பேசிய சரோஜினி, ''நேதாஜியினால்தான் (முலாயம் சிங் யாதவ்) நான் 2 முறை கட்சியின் மேலவை உறுப்பினராக இருந்தேன். அவர் கட்சியில் தீவிரமாக இயங்காததால், பதவி விலகியுள்ளேன். கட்சியில் உள்ள அனைவரையும் நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்றார்.
பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாலாப் மணி திரிபாதி கூறும்போது, ''மற்றவர்களுக்கு மோடி மற்றும் அமித் ஷா மீதுள்ள நம்பிக்கையும், பிடிப்பும் அதிகமாகி உள்ளதையே இது காட்டுகிறது'' என்றார்.
அமித் ஷாவின் லக்னோ பயணத்தின்போது, 3 எம்எல்சிக்கள் எதிர்க்கட்சிகளில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.