ராமஜென்ம பூமி - பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம்?- உச்ச நீதிமன்றம் டிசம்பர் 5-ம் தேதி விசாரணை

By எம்.சண்முகம்

அயோத்தியில் ராமஜென்மபூமி மற்றும் பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்கும் பொறுப்பு உத்தரபிரதேச மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்த இடம் மற்றும் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை கடந்த 30.9.2010-ல் தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2:1 என்ற அடிப்படையில் வழங்கிய அந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லாலா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிபங்காக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 13-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று நடந்தது.

வழக்கில் சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ராஜீவ் தவான் ஆகியோர், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், கல்வெட்டுகள் ஆகியவை பாலி, சமஸ்கிருதம், அரபு, பெர்ஷியன், உருது ஆகிய மொழிகளில் உள்ளன. அவை முதலில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதன்பிறகுதான் வழக்கின் விசாரணையையே தொடங்க முடியும் என்று வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், கடந்த ஏழு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள், அப்போது மொழி பெயர்த்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த ஆவணங்கள் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்கள் மொழி பெயர்ப்பதா அல்லது பொதுவாக யாராவது மொழி பெயர்ப்பதா என்பது குறித்து விவாதம் நடந்தது. இறுதியில் இந்த ஆவணங்களை உத்தரபிரதேச மாநில அரசு 10 வாரங்களுக்குள் மொழி பெயர்க்க வேண்டும் என்று அவகாசம் அளிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு பணி முடிந்ததும் வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும். அப்போது இந்த வழக்கில் மனுதாரர்களாக உள்ள ராம் லாலா, சன்னி மத்திய வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, உத்தரபிரதேச மாநில அரசு, சொத்துக்கான உரிமையாளர்களின் வாரிசுகள், வழக்கு நடைபெறும்போது இறந்தவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். தொடர் விசாரணை நடத்தி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாக விவாதத்தை முடிக்க வேண்டும். அப்போது எக்காரணம் கொண்டும் வழக்கை ஒத்திபோட கால அவகாசம் தர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து முடிவான பின், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்துள்ள, ராமர் பிறந்த இடத்தில் வழிபடும் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்