ஆப்பிள் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தங்கள் சொந்தத் தகவல்களை அளிப்பதில் 99% குடிமக்கள் கவலைப்படாத போது அரசு அதே தகவல்களை வைத்திருப்பது எப்படி தர அடிப்படையில் வேறுபட்டதாக இருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திராசூட் ஆதார் வழக்கு விசாரணையில் மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினார்.
“தாங்கள் அளிக்கும் விவரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கவலை பெரும்பாலோருக்கு இல்லை. 35 கோடி இணையதளப் பயனாளர்கள், 18 கோடி தொலைபேசி பயனாளர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் 99% மக்கள் தாங்கள் அளிக்கும் விவரங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கவலைகள் இருப்பதாகத் தெரியவில்லையே. நீங்கள் உங்கள் விரல்களால் ஐபேடை கையாளும் போதே உங்கள் பற்றிய தரவுகள் பொதுவெளிக்கு வந்து விடுகிறதே” என்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி சந்திராசூட் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாஜன் பூவய்யாவிடம் கூறும்போது, “மும்பையிலிருந்து டெல்லி செல்ல நீங்கள் முடிவெடுக்கிறீர்கள் என்றால் அத்தருணத்தில் உங்களுக்கு 100 ஆலோசனைகள் வருகின்றன. உங்கள் சொந்த, தனிப்பட்ட தகவல்கள் தனியார் கைவசம் உள்ளது. அதையே அரசு வைத்திருப்பது என்பது எந்தவிதத்தில் தர அளவில் வேறுபட்டது? நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டீர்கள். ஆனால் அரசு மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இங்கு வாதிடுகிறீர்கள்” என்றார்.
தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசனச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமையின் கீழ் வருகிறதா என்ற இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முடிவுகளின் அடிப்படையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனியுரிமைகளை ஆதார் அட்டை விவரங்கள் பறிக்கிறதா இல்லையா என்ற தீர்ப்பை அளிக்கும்.
ஏற்கெனவே 100 கோடி மக்கள் பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்துள்ள நிலையில் தகவல் பாதுகாப்பு குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தரவுகளை பாதுகாப்பாக அரசு எங்கு சேமிக்கும், குடிமக்கள் இந்தத் தரவுகளின் பயன்கள் பற்றி அறிவுறுத்தப்பட்டார்களா, அவர்களது சுயவிவரங்கள் சேகர்க்கப்படுவதற்கு முன்பு அவர்கள் சம்மதம் பெறப்படுகிறதா என்று மிகப்பெரிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன.
இந்நிலையில் நீதிபதி சந்திராசூட் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த வழக்கறிஞர் பூவய்யா, ஒரேயொரு குடிமகன் தன் தரவு எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி கவலைப்பட்டால் கூட அவரது கவுரவத்தையும் தனிநபர் உரிமையையும் அரசியல் சாசனச் சட்டப்படி காப்பது கடமையல்லவா என்றார்.
தனிநபர் உரிமை என்பது ரகசியக் காப்பு என்பதில் வராது அது கவுரவம் என்பதில்தான் அடங்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பூவய்யா வாதிட்ட போது, “என்னுடைய இருதயத் துடிப்பைக் கூடத்தான் ஆப்பிள் கண்காணிக்கிறது. நான் நன்கு தெரிந்து தனியார் நிறுவனத்துக்கு அளிக்கிறேன் என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைவருக்கும் எனது சுயவிவரத்தை அளிப்பதென்பதாகாது. தனியார் நிறுவனம் என் சொந்த விவரங்களை எடுத்து அனைவருக்கும் தெரியும்படியாக வெளிப்படுத்தினால் ஒப்பந்தத்தை மீறியதாக நான் அவர்கள் மீது வழக்கு போட முடியும். ஆனால் அரசுக்கு அளித்தேன் என்றால் அதற்கான பாதுகாப்புகள் என்ன?
நான் எனது சுயவிவரத்தை பொதுவெளிக்கு சமர்ப்பிக்கிறேன் என்பதற்காக எனது தனிநபர் உரிமையை அறுதியிடுவதை நான் இழந்து விடுகிறேனா என்ன?
அரசு நம்மை கண்காணிக்கிறது என்பதே குடிமக்கள் உரிமையை ஜில்லிடச் செய்கிறது. என்னுடைய சொந்த விவரங்களை திரட்டி, ஆய்ந்து ஒழுங்கு படுத்துவதான அரசின் வரம்பற்ற அதிகாரம் என்னை அச்சமடையச் செய்கிறது. ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம், அரசு அவ்வாறு செய்யாது என்றாலும், நான் இப்போது அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன், ஆனால் பிற்பாடு ஒரு சமயத்தில் அரசைக் கேள்வி கேட்கிறேன் என்றால் என்னுடைய சொந்த அந்தரங்கத்தகவல்களை எனக்கு எதிராகப் பயன்படுத்தலாமே.” என்று வாதிட்டார்.
ஒரு தருணத்தில் நீதிமன்றம், பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களுக்காகவோ, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக அரசு ஒருவரின் சுயவிவரங்களை சேகரிப்பதற்கு மனுதாரர்கள் ஆட்சேபிக்கின்றனரா என்ன? என்று கேட்டது.
இதற்குப் பதில் அளித்த பூவய்யா, “பயங்கரவாத நடவடிக்கைகளில் அரசின் கைகளைக் கட்டிப்போடப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லை. தரவுகள் சட்டப்படி சேகரிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்” என்றார்.
இதற்கு நீதிபதி போப்தே, “ஆனால் 80 சதவீத இணையதளம் எப்படிப்பார்த்தாலும் இருண்டவலையாகத்தானே இருக்கிறது” என்றார்.
பூவய்யா இதற்கு பதில் அளிக்கும் போது, “கட்டுப்பாடுகளைத் தாண்டி செயல்படும் எந்த ஒரு அரசும் இருள்வலையை நோக்கி நகரவே செய்யும். ரஷ்யாவில் பிராக்சி வெப்சைட்டுகள் இயங்குவதற்குக் காரணம் அரசு அதனை ஆதரிப்பதே” என்றார்.
இதற்கு போப்தே, “90% தரவுகள் ஏற்கெனவே திரட்டப்பட்டு விட்டதே” என்றார்.
பூவய்யா, “ஆம். ஆனால் அவை எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன? என்னுடைய அந்தரங்கத் தகவல்கள் இணையதளத்தில் வலம்வராது என்பதோ, இருள்வலைக்குச் செல்லவில்லை என்பதோ உத்தரவாதமானதல்ல. தரவுகளைப் பாதுகாக்க அரசுக்கு சில நிபந்தனைகளை விதிப்பது அவசியம். பாதுகாப்பு அளிப்பதற்கு அவர்களுக்கு சரியான வழியில்லை எனில் என்னுடைய சுயவிவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவே கூடாது” என்றார்.
மேலும், “ஓராண்டுக்கு முன்னரே நீதிபதிகளாகிய நீங்கள் இதே சேர்க்கையில் தனியுரிமை என்பது அடிப்படை உரிமையே என்று நிலைநாட்டியிருந்தீர்கள் என்றால் அரசு குடிமக்களிடமிருந்து பயோமெட்ரிக் விவரங்களைத் திரட்டியிருக்குமா?” என்று மூத்த வழக்கறிஞர் சாஜன் பூவய்யா நீதிமன்றத்தில் காரசாரக் கேள்வி எழுப்பினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago