த.மா.கா. கலைக்கப்படவில்லை: எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றுவாரா வாசன்?

By ஆர்.ஷபிமுன்னா

திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், ஏற்கெனவே ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுகவில் இணைந்து கட்சியை தொடங்கினார். அதுபோல், காங்கிரஸுடன் இணைக்கப்பட்டாலும் மத்திய தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) பதிவு நீக்கம் செய்யப்படவில்லை. எனவே, த.மா.கா.வில் ஜி.கே.வாசன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸில் பிரிந்து புதிய கட்சி உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ள ஜி.கே.வாசன், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) பெயரிலேயே கட்சியை தொடங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் தந்தையான மூப்பனார், 1996-ல் த.மா.கா-வை தொடங்கினார்.

மூப்பனார் பதிவு செய்த வைத்த அரசியல் கட்சியின் பெயர் ‘தமிழ் மாநில காங்கிரஸ்(மூப்பனார்)’ என்பது தான். எனினும் அவர் இதில் மூப்பனாரை எடுத்து விட்டு வெறும் ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற பெயரிலேயே பிரச்சாரம் செய்து வந்தார். அவர், காங்கிரஸுடன் இணைந்த பின் த.மா.கா கலைக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால், அதில் இருந்த சில நிர்வாகிகள் அக்கட்சியின் பெயரை கலைக்காமல் இன்னும் அதை பதிவு நிலையில் வைத்துள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸுடன் இணைந்த பின்பு மூப்பனார் த.மா.கா.வை கலைத்து விட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார். ஆனால், அதில் இருந்த புதுச்சேரியை சேர்ந்த ஒருசில நிர்வாகிகள், அதைக் கலைக்க விரும்பாமல் தாம் நடத்த விரும்புவதாகக் கூறி, அக்கட்சியின் பதிவை வைத்துக் கொண்டனர். எனவே, வாசன் அதே பெயரில் கட்சி தொடங்க விரும்பினால், ஏற்கெனவே பதிவாகி உள்ள த.மா.கா(மூப்பனார்) என்ற பெயரிலான கட்சியில் இணைந்து நடத்த வேண்டும். இல்லை எனில் அவர், வேறு பெயரில் புதியதாக ஒன்று பதிவு செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தனர்.

சைக்கிள் சின்னம் இல்லை

த.மா.கா(மூப்பனார்) எனும் பெயரிலான கட்சி தற்போது, புது நகர், கானுபேட் வில்லியனூர், புதுச்சேரி என்ற விலாசத்தில் இருப்பதாக, மத்திய தேர்தல் ஆணையப் பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசி அதை வசப்படுத்தினாலும் வாசன் தரப்புக்கு, சைக்கிள் சின்னம் மீண்டும் கிடைக்காது எனவும் தேர்தல் ஆணைய வட்டாரம் கூறுகிறது.

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் மற்றும் தொகுதிகள் பெற்றதால் தேசிய கட்சியாக நிலை பெற்று விட்டது. தேசிய கட்சிகளாகி விட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும் ஒதுக்க முடியாது. இதற்காக, 1998-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் புதிதாக சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. எனவே, த.மா.கா(மூப்பனார்) கட்சிக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்காது.’ என்றனர்.

அதிமுகவும் எம்ஜிஆரும்

புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இதேபோன்ற சூழல், தற்போது வாசனுக்கும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்