ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பதை 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இத்திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன் தனிநபர் சுதந்திரம் குறித்து எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் 8 நீதிபதிகள் வரை அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இதுகுறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜெ.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று கூடி விசாரணை நடத்தியது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘ஆதார் கட்டாயம் என்று தெரிவித் துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த நாடே ‘வதை முகாம்’ போல மாற்றப் பட்டுள்ளது. 18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் கூட பயோமெட்ரிக் மூலம் ஆதார் எண் பதிவு செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். நலத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் என்று வலியுறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் கூட, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கேட்டு மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்’ என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, இதற்கு முந்தைய தீர்ப்புகளில் தனிநபர் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, இந்த வழக்கு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று ஆதார் வழக்கை விசாரிக்கிறது. காலை 10.30 மணி முதல் 1 மணி வரை மனுதாரர்கள் தரப்பிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை அரசு தரப்பிலும் வாதிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டம் தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா என்பது பற்றி மட்டும் இந்த அமர்வு விசாரித்து முடிவெடுக்கும். பின்னர், ஆதார் திட்டத்தின் சட்ட அங்கீகாரம் குறித்து முடிவெடுக்க மீண்டும் 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வழக்கும்... தீர்ப்பும்...
எம்.பி.சர்மா எதிர் சதிஷ் சந்திரா வழக்கு(15.3.1954):
ஒருவருடைய தொழில் நிறுவனம் போலீஸாரால் சோதனையிடப்பட்டு அவரது நிறுவன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தனிநபர் சுதந்திரத்தை மீறிய செயல் என்று வழக்கு தொடர்ந்தார்.
பி.ஜெகன்னாததாஸ் தலைமை யிலான 8 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தனிநபர் சுதந்திரம் என்பது முழு மையான அடிப்படை உரிமையல்ல. ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அவரை சோதனையிட்டு ஆவணங்களைப் பறிமுதல் செய்வது சட்டப்படி சரி. இது தற்காலிக நடவடிக்கைதான் என்று தீர்ப்பளித்தது.
கரக்சிங் எதிர் உத்தரபிரதேச மாநில அரசு(18.12.1962):
கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். அவர் மீது குற்றப் பின்னணி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதை எதிர்த்து தனது அடிப்படை சுதந்திரம் பறிபோவதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி என்.ராஜகோபால அய்யங்கார் தலைமையிலான 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்படவில்லை. போலீஸ் கண்காணிப்பில் உள்ள ஒருவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைதான். அதேசமயம், அவரது வீட்டில் நுழைந்து நள்ளிரவில் சோதனையிடுதல் போன்றவை ரத்து செய்யப் படுகிறது என்று தீர்ப்பளித்தது.
வழக்கறிஞர் அய்யனாரப்பன் கூறும்போது, ‘தனிநபர் உரிமை என்பது அவரைப் பற்றிய தனிப் பட்ட தகவல்களைப் பொதுவாக பயன் படுத்துவதில் இருந்து பாதுகாப்ப தாகும். அவரது தனிப்பட்ட தகவல் கள் தனிப்பட்டதாகவே இருக்க அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல் இந்தியாவில் தனிநபர் உரிமை பாதுகாப்புச் சட்டம் எது வும் இல்லை. நாட்டு மக்களின் தகவல்கள் அரசு மற்றும் கார்ப்ப ரேட் நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆதார் தகவல்களை மத்திய அடையாள ஆவண தொகுப்பகம் (சிஐடிஆர்) தான் பாதுகாக்கிறது. இங்கிருந்து தகவல்கள் கசிய வாய்ப்புகள் அதிகம். உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதுகுறித்து முடிவெடுத்தால், தொலைபேசி ஒட்டுக்கேட்பு, கேமரா மூலம் கண்காணிப்பது போன்றவற்றிலும் தீர்ப்பின் தாக்கம் இருக்கும்’ என்றார்.
‘கருவிழி, கைரேகை அந்தரங்கமானதே’
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமார் கூறுகையில், ‘‘தனி மனித ரகசியத்திற்கான உரிமைச் சட்டம் என்பது ஒரு மனிதனை அவனது அந்தரங்கத்தை பல்வேறு வகைகளில் அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பதை அல்லது தொடர்வதை தடுத்து பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட உரிமையாகும். மனிதனின் கருவிழிகள், கைரேகைகள் போன்றவையும் அவனது அந்தரங்கம் தொடர்பானவையே. இவற்றை சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு வெளிப்படுத்துவது என்பது தனிமனித உரிமையை கண்டிப்பாக பாதிக்கும். அதேநேரம், இந்த சட்டத்தின் கீழ் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒருவரின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது அல்லது வாழ்வியலில் ஒன்றாகிவிட்ட மொபைல் போன் மூலமாக அவரின் அன்றாட இயக்கத்தை தெரிந்துகொண்டு தொடர்வதும் குற்றமே. ஆனால், ஒருவேளை தனி மனித ரகசியத்திற்கான உரிமை அடிப்படை உரிமை என ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் அரசியலமைப்பு சட்ட ரீதியாக சமவாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago