சீனாவின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யக் கூடாது

By சேகர் குப்தா

கடந்த மூன்று வாரங்களாக ராணுவ ரீதியாக நமக்குள்ள ஆபத்துகள் எவை, நம்முடைய வியூக பலம் எப்படி இருக்கிறது என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. சிக்கிமின் டோக்லாம் பகுதி யாருடையது என்ற இழுபறியில் சீன ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கைகளை முதலில் ஊதா நிறத்தில் சொல்லத் தொடங்கி, இப்போது சிவப்பு நிறத்துக்கு மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ‘குளோபல் டைம்ஸ்’ என்ற சீன நாளிதழில் வெளியான தலையங்கம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ‘பொய்யர்’ என்று கண்டித்திருப்பதுடன், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் எல்லைகளிலும் சண்டைகளை மூட்டுவோம் என்றும் எச்சரிக்கிறது. டோக்லாமிலும் வேறு இடங்களிலும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்தாலும் சீனாவுடன் நடக்கும் போரில் தோற்றுவிடும் என்று கொக்கரிக்கிறது.

இந்த மிரட்டல், எச்சரிக்கைகளை கேட்டு இந்தியாவில் யாரும் கண்ணியமற்ற மொழியில் பதிலுக்குக் கத்தவில்லை. நம்முடைய ‘தேசபக்த’ சேனல்களை இன்னமும் ஏன் அரசு அவிழ்த்துவிடவில்லை என்றுகூடத் தோன்றியது. அப்படிச் செய்தால் சீன ஊடகங்கள் வாயடைத்துப் போயிருக்கும்.

நம்முடைய போர்ப்பரணி ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை. அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராகப் போரிடுபவை. அதற்குத் துணையாக வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும். கொள்கை முடிவுகளை அமல்படுத்த அரசுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. சீன ஊடகம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. எனவேதான் அது சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும்.

டோக்லாம் பகுதி பூசல் என்பது வெறும் அடையாளம். அதைவிடப் பெரிதான, ராணுவ வியூகரீதியிலான பிரச்சினை பின்னணியில் இருக்கிறது. சீனாவின் “ஒரே பிராந்தியம் ஒரே சாலை” என்ற திட்டத்தை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்கூட ஏற்றுக்கொண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்தியா பங்கேற்காமல் இருந்ததுடன் தனது இறையாண்மையை மீறுவதாகக் குற்றஞ்சாட்டியதை சீனாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அடுத்தது இதற்காகவே, பாகிஸ்தானுக்காக இன்னொரு நாடு களம் இறங்கவும் எதிர்காலத்தில் சாத்தியம் இருக்கிறது என்று மிரட்டியது. மூன்றாவது அம்சம் முக்கியமானது. “ஆசிய கண்டத்திலேயே பெரிய நாடு என்று நீயாக உன்னை அறிவித்துக் கொள்வாயா? எங்களுக்கு இணையாக இன்னமும் நீ வளர்ந்துவிடவில்லை என்பதை மறந்துவிடாதே” என்பதே அது.

அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்திய ராணுவம் ‘மலபார்’ என்று பெயரிடப்பட்ட போர்ப் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டது சீனாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. “ஏதாவது அச்சுறுத்தல் என்றால் அமெரிக்காவும் ஜப்பானும் ராணுவரீதியாக உதவிக்கு வந்துவிடும் என்று இந்தியா மனப்பால் குடிக்கக்கூடாது, அத்தகைய உதவிகள் எல்லாம் வெறும் கானல்நீர் போன்றவை” என்கிறது. “இந்திய பெருங்கடலில் ராணுவரீதியாக சீனாவுக்கு நெருக்கடி தர முடியும் என்று கருதினால் அது இந்தியாவின் அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். சீனாவிடம் ஓர் ஆயுதம் அல்ல, பல ஆயுதங்கள் உள்ளன இந்திய எல்லை களைச் சுற்றி அதற்குப் பிரச்சினைகளை ஏற்படுத் துவதற்கு; அதற்கு ஈடாக ஓர் ஆயுதமும் இல்லை இந்தியாவுக்கு” என்று கூறியிருக்கிறது சீனா.

இந்தியாவின் நில எல்லையில் அனேக இடங்கள் பாதுகாப்பற்றவை என்று கூறுகிறது சீனா. இந்தியா இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கை அடைய வேண்டும்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகிலும் காஷ்மீரப் பள்ளத்தாக்கிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துமாறு பாகிஸ்தானுக்குக் கட்டளை இடுவோம் என்று எச்சரிக்கிறது சீனா. சில இடங்களில் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. கிழக்கு-மத்திய மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து, கிழக்கு அருணாசலம், அசாம் ஆகியவற்றிலும் கலகக்காரர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர். சீனா விடுத்த எச்சரிக்கைகள் இவற்றைப் பற்றித்தானா? இப்போது மோதல் ஏற்பட்டிருக்கும் சிக்கிமுக்கு அருகில், ஹெலிகாப்டரில் சென்றால் சில நிமிஷங்களில் அடைந்துவிடக் கூடிய டார்ஜிலிங்கில் இன-மொழி அடிப்படையிலான கோர்க்கர்கள்-மேற்கு வங்க அரசு மோதல் தொடர்கிறது. சில எல்லையோர மாவட்டங்களில் வகுப்புக் கலவரங்களும் மூளத் தொடங்கியுள்ளன. இம் மாதிரியான கிளர்ச்சிகள் சாதாரணமாகத் தெரிந்தாலும் வெகு எளிதில் அரசின் கட்டுப்பாட்டை மீறி பெரிதாகும் கூறினைப் பெற்றவை. சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாகாலாந்தில் அரசு கவிழ்ந்துவிட்டது. பாஜகவுக்கு சாதகமான புதிய அரசு பதவியேற்றிருக்கிறது. நாகாலாந்து பழங்குடிகளுக்கு இடையிலான சமபல நிலைமைக்கு இதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது. சமரசம் கூடாது என்று கருதும் பழங்குடிகளுக்கு அரசின் ஆதரவுக் கரம், ஆளுநர் மூலம் நீண்டிருக்கிறது. இதே வாரத்தில் திரிபுராவில் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி இன்னொரு பழங்குடிகள் தேசிய நெடுஞ்சாலையை மறிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சீனாவுடன் டோக்லாமில் பூசல் ஏற்பட்டுள்ள இச்சமயத்தில் டார்ஜிலிங், எல்லையோர மேற்கு வங்க மாவட்டங்கள், திரிபுரா, நாகாலாந்து ஆகிய பகுதிகளில் அமைதி யின்மையைத் தூண்டிவிடுவது தேசிய நலனுக்கு நல்லதா? மேற்கு வங்கத்திலும் வடகிழக்கிலும் பாஜக காலூன்றுவதற்காக இப்படி உள்ளூர் மக்களிடையே பூசலை வளர்ப்பதா?

நாட்டின் கிழக்கிலும் மத்திய மாநிலங்களிலும் செயல்படும் மாவோயிஸ்ட்களிடம் சீனாவுக்கு செல்வாக்கு இருக்கிறது. காஷ்மீரில் சீனாவின் தோழனான பாகிஸ்தான் பிரச்சினைகளை மேலும் வளர்க்கும். ஆனால் இது நம்மால் தற்காத்துக்கொள்ள முடியாத எல்லை அல்ல. பலவீனமான நம்முடைய எல்லைகள் டோக்லாமுக்கு அருகில் மேற்கு வங்க எல்லை மாவட்டங்களிலும், சிலிகுரி பிராந்தியத்திலும் வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகளிலும்தான் உள்ளன. உங்களுடைய ‘குரல்வளை’ போன்ற எல்லைதான் இப்போது எதிரிக்கு எளிதான இலக்காக இருக்கிறது. ராணுவரீதியாக இவை நமக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய நிலப்பகுதிகள். இதைத்தான் சீன ஊடகங்கள் நினைவுபடுத்துகின்றன. இந்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யக்கூடாது.

காஷ்மீரத்திலும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப்பகுதியிலும் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. எனவே ஏராளமான மலையரண் படைப்பிரிவுகள் பாகிஸ்தானையொட்டிய எல்லைப்பகுதியில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். நாகாலாந்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. டார்ஜிலிங்கில் கோர்க்கர்கள் தனி மாநிலம் கேட்டு கிளர்ச்சி செய்கின்றனர். திரிபுராவில் பழங்குடிகள் தனி மாநிலம் கேட்டு கிளர்ச்சி செய்கின்றனர். இதன் பின்னணியில் அரசியல் இருப்பது தெரிகிறது. அரசியல்ரீதியாகத் தலையிடும் மாநில ஆளுநர்களையும், ஆர்எஸ்எஸ் கமாண்டோக்களையும், சங்கப் பரிவாரப் படைகளையும் மீண்டும் பாசறைக்குத் திரும்ப அழைக்க வேண்டும். இப்போது மிகவும் வலுவான எதிரி நம்முடைய எல்லைக்கருகில் வந்தாகிவிட்டது. இதை நாம்தான் சரி செய்துகொண்டு நம் வீட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். வட கிழக்கை பாஜக கைப்பற்றும் திட்டத்தைப் பிறகு செயல்படுத்திக் கொள்ளலாம்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,

இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்