இரண்டரை போர் முனைகளில் முற்றுகை!

By சேகர் குப்தா

சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் மோதல் போக்கில் இறங்கியிருக்கிறது; பாகிஸ்தான் மேற்கே சீண்டிக் கொண்டே இருக்கிறது. உள்நாட்டில் மாவோயிஸ்ட்களின் தாக்குதல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இதையொட்டியே ‘இரண்டரைப் போர் முனைகளிலும் சண்டையிடத் தயார்’ என்று கூறினார் இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் விபின் சந்திர ராவத். அதை இந்தியாவில் வரவேற்றும், சீனாவில் கண்டித்தும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

1959 முதலே இந்தியா வெவ்வேறு முனைகளில் இருந்து தாக்குதல் ஆபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ராணுவமோ அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டு இதை நிரந்தரமாக நீக்க முடியாமல் இருக்கிறது. 1962 தவிர்த்து பிற சமயங்களில் இந்திய ராணுவம் தன் பலத்தைக் காட்டியே வந்திருக்கிறது.

ராவத்தின் பதில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவை இரண்டரைப் போர் முனைகளில் தொடர்ந்து ஆபத்துகள் சூழ்ந்து கொண்டே இருப்பது எதனால்?

முதல் கேள்வி, மூன்று முறை பெருஞ்சண்டை நடந்திருக்கிறது, பாகிஸ்தான் இரண்டாகக் கூட துண்டாடப்பட்டது, வட கிழக்கில் பிரிவினை வாதிகளுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியிருக்கின்றன, அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான ‘பனிப்போர்’ கூட முடிவுக்கு வந்துவிட்டது, இந்தியா அணு ஆயுத நாடாகி விட்டது, இன்னும் ஏன் ஆபத்து நீங்கவில்லை? உலகில் வேறு எந்த நாட்டுக்கு, ராணுவத்துக்கு இப்படி 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அச்சுறுத்தல் நீடித்துக் கொண்டிருக்கிறது?

இரண்டாவதாக, இப்படித் தொடர்ந்து ராணுவ ஆபத்தைச் சந்தித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் இந்தியாவின் ராஜ்யக் கொள்கையா அல்லது வியூகம் வகுப்பதில் உள்ள நடைமுறை களா, அவை சரியாக இருந்தும் இது தொடர்கிறதா? இந்திய ராஜ்யக் கொள்கை நம்முடைய ராணுவ பலத்துக்கு ஏற்ப வகுக்கப்படுகிறதா, வியூகம் என்பது அதற்குக் கட்டுப்பட்டதா, அல்லது இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறதா?

முதலாவது, பனிப்போர் காலம் பற்றியது. ‘வார்சா’ ஒப்பந்த நாடுகள் என்று அழைக்கப்படும் சோவியத் சார்பு நாடுகள் தங்களுடைய ராணுவ வலிமை, ராணுவமயப்பட்ட சிந்தனையாலேயே தங்களுக்குள் நொறுங்கி வீழ்ந்தன. அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் சிறந்த உத்தியால் சோவியத் ஆதரவு நாடுகள் நொறுங்கவில்லை; ஆழம் தெரியாமல் ஆப்கானிஸ்தான் சண்டையில் இறங்கியதாலேயே நொறுங்கி விழுந்தன என்கிறார் வரலாற்றாசிரியர் நியால் பெர்குசன்.

மூன்றாவதாக, 60 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய பகைவர்களும் மாறவில்லை, பகைமையும் குறையவில்லை என்றால் நம்முடைய அரசியல் தலைமையும் ராணுவத் தலைமையும் தேசிய நலனில் அக்கறை கொண்டு செயல்படத் தவறின என்று முடிவு கட்டலாமா? ராணுவத்தைப் பலப்படுத்தவும் தவறிவிட்டு, உத்திகளையும் தன்னிச்சையாக வகுக்க அனுமதிக்காமல் தடுத்துவிட்டு, “எப்படியாவது சீனர்களைத் தூக்கி வெளியே வீசு” என்று 1962-ல் சொன்னதைப் போலச் சொல்வதை இனியும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

ஒரு ராணுவம் எவ்வளவுதான் வீரம் மிக்கதாக இருந்தாலும் இரு போர் முனைகளில் போரை நடத்துவது கடினம் என்பதை நவீன வரலாறு நமக்கு உணர்த்துகிறது; ஐரோப்பிய நாடுகளின் மீது போரை நடத்திக் கொண்டே ரஷ்யா மீதும் படையெடுத்த ஹிட்லரின் முட்டாள்தனத்தை இங்கே சுட்டிக்காட்டவில்லை.

ராஜதந்திரம் மூலம்

ராஜதந்திரம் மூலம் நாம் மூன்று நடவடிக்கை களை முன்னுரிமை தந்து மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, தேச நலனில் அக்கறை கொண்டு எப்பாடுபட்டாவது போர் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும். இரண்டாவதாக, ராணுவத்தின் வலிமையைப் பெருக்கிவிட்டு அதைப் பயன்படுத்தாமல் எதிரிக்கு அதை உணர்த்தியே மிரட்டி காரியத்தைச் சாதிக்க வேண்டும், மூன்றாவதாக, முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டால், ‘எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள்’ என்று ராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் அளித்துவிட வேண்டும்.

சுதந்திரம் அடைந்தது முதல் நாம் சந்தித்த போர்களின்போதெல்லாம், இன்னொரு முனையி லும் நமக்கு எதிரியின் தாக்குதல் வந்துவிடுமோ என்று அஞ்சி, அப்படி வராமலிருக்க சில நட வடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். 1962-ல் சீனா படையெடுப்பின்போது, பாகிஸ்தானும் போருக்கு வந்துவிடாமலிருக்க அதைக் கட்டுப் படுத்தி வைத்திருக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைக் கேட்டுக் கொண்டார் நேரு. இதற்குக் கொடுத்த விலை தான், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ‘மூன்றா வது தரப்பு’ உள்ளே நுழைய வாய்ப்புகளை ஏற் படுத்தித் தந்தது. ஸ்வரண் சிங்கும் புட்டோவும் 1962-63-ல் காஷ்மீர் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்டனர்.

நேருவும் பிறகு லால்பகதூர் சாஸ்திரியும் இதைத் தொடர்ந்தனர். 1965-ல் பாகிஸ்தான் திடீரென்று படையெடுத்து சாகசத்தில் ஈடுபட்டது. ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’, ‘ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம்’ என்ற பெயர்களில் மேற்கு, கிழக்கு எல்லைகளில் பாகிஸ்தான் தாக்கத் தொடங்கியது. அப்போது வட கிழக்கில் நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாஸ்திரி தலைமையிலான அரசு துணிச்சலாக முடிவெடுத்து சியால்கோட், லாகூர் பகுதிகளில் புதிய போர்முனைகளைப் பாகிஸ்தானுக்குள்ளேயே ஏற்படுத்தியது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இதனால் ஆபத்து குறைந்தது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து படைகள் தாக்கியபோதும் அங்கே போர்முனையை ஏற்படுத்தாமல் அரசு தவிர்த்தது. வெவ்வேறு தொலைதூரப் பகுதிகளில் ராணுவத்தின் இரு பிரிவுகளை வைத்துச் சண்டையிடுவது பாகிஸ்தானுக்குத்தான் பெரிய தொல்லையாக மாறியது. அப்போது களத்தில் குதிக்க சீனாவுக்கு வாய்ப்பு எதுவும் தரப்படவில்லை.

22 நாட்களுக்குப் பிறகு போரானது பாகிஸ் தான் விரும்பிய திசையில் செல்லவில்லை. வேறு வழியில்லாமல் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அப்போது, ‘திபெத்தைச் சேர்ந்த 4 கால்நடை மேய்ப்பர்களை கடத்தியதுடன் அவர்களது 59 காட்டெருமைகளையும் 800 செம்மறி ஆடுகளையும் இந்திய ராணுவம் திருடிச் சென்றுவிட்டதாகவும்’ இந்தியா மீது சீனா பொய்யாகப் புகார் கூறியது. உடனடியாக இவற்றைத் திருப்பித் தராவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்தது. அப்போது டெல்லியில் இந்திய இளம் தலைவர்கள் பலர் 800 ஆடுகளைச் சீனத் தூதரகத்துக்கு ஓட்டிச் சென்று, ‘சண்டை வேண்டாம் சமாதானமடையுங்கள்’ என்று கேலி செய்தனர். ‘என்னைச் சாப்பிடு, உலகை அழிக்காதே’ என்று எழுதப்பட்ட அட்டைகள் ஆடுகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. ஜெலப்லா என்ற இடத்தில் இந்தியப் பகுதி காவல் காக்க யாரும் இல்லாமல் ஆளற்றப் பகுதியாக விடப்பட்டது. இன்னொரு போர்முனை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு இப்படிச் செய்யப்பட்டது.

1971-ல் நடத்திய போர் மட்டுமே முன்கூட்டியே நம்மால் திட்டமிடப்பட்டது. சீனா நம்முடன் சண்டைக்கு வராமல் தடுக்க சோவியத் யூனியனுடன் ‘சமாதானம், நட்புறவு, ஒத்துழைப்புக்கான’ உடன்பாட்டை அவசர அவசரமாகச் செய்துகொண்டார் இந்திரா காந்தி. இதனால் நாம் போரிட ஒரே முனை, நமக்கு ஒரே எதிரி என்பது நிச்சயமாயிற்று. தரைப்படைத் தலைமை தளபதி சாம் மானெக் ஷாவை அழைத்து, “கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசமாக) விடுதலை பெற வேண்டும், தேவையானவற்றைச் செய்யுங்கள்” என்று முழுச் சுதந்திரம் அளித்தார் இந்திரா. 13 நாட்களில் வங்கதேசம் உதயமானது. மிசோரம், நாகாலாந்து ஆகியவற்றில் எதிர் நடவடிக்கைகள் தலைதூக்காதபடி, கிழக்கு பாகிஸ்தானில் அவற்றுக்கு உதவியாக இருந்த தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அவர்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டார்கள்.

வல்லரசுகளிடையே பனிப்போர் ஓய்ந்தும், மதத் தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் முழுக்க கோபக் கனல் மூண்டும் கூட இந்தியாவுக்கு இரண்டு போர் முனைகள் என்பது மாறாமலேயே நீடிப்பதை வரலாறு புவியியல்ரீதியிலான சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும். இடைப்பட்ட காலத்தில் சீனா பாகிஸ்தான் உறவு தொடர்ந்ததல்லாமல் சமீபத்தில் மேலும் வலுவாகிவிட்டது. ட்ரம்பின் விவேகமற்ற அரசியல் செயல்பாட்டால் துணிச்சல் பெற்றுள்ள சீனா மற்றவர்களுக்குச் சவால் விடுகிறது. பாகிஸ்தான் இப்போது அதற்கு மிகவும் வேண்டப்பட்ட சகாவாகிவிட்டது. ‘ஒரே பிரதேசம்’, ‘ஒரே சாலை’ என்ற அதன் புதிய திட்டம் பொருளாதாரத்தைவிட ராணுவ நோக்கம் அதிகம் கொண்டது. இந்திய எல்லைப் பகுதி வழியாகவே சாலை அமைத்து சீண்டப் பார்க்கிறது சீனா. அணு ஆயுதங்களை வைத்திருக்கும், அடுத்தடுத்த நிலப் பகுதியைக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா.

இந்த சோதனைகளெல்லாம் இப்போதைய அரசினால் உருவானதும் அல்ல, அதன் தவறினால் ஏற்பட்டதும் அல்ல. பிரதமராக வரும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு விடை காண முயற்சித்து வருகின்றனர். ராஜீவ் காந்தியும் வாஜ்பாயும் சீனாவுடன் அர்த்தமுள்ள உறவை மேற்கொண்ட முயற்சிகளால் சிறிது காலத்துக்கு அமைதி நிலவியது. சிக்கிம் இந்தியாவுடையதுதான் என்று சீனா அங்கீகரித்தது. மன்மோகன் சிங் மேற்கொண்ட சமரச முயற்சிகளாலும் இப் போர் முனைகள் எண்ணிக்கை மாறவேயில்லை. “பிரச் சினையை சுமுகமாகத் தீர்த்தால் தனக்கு ஆதாயம் இல்லை என்று சீனா கருதுகிறது, பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ள அதனால் முடியும்” என்று மன்மோகன் சிங் உணர்ந்து கொண்டார். பாகிஸ்தானுடன் முதலில் சமரசம் கண்டு பிரச்சினையைத் தீர்க்க அவர் முடிவெடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தானை சமாதான வழிக்கு வரவழைத்துவிடும் என்று நம்பினார். ‘மும்பை குண்டுவெடிப்பு போன்ற சம்ப வங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையில் சமரசப் பேச்சுகளை நிறுத்த வேண்டியதில்லை, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான்’ என்று கூறும் கூட்டறிக்கை வெளியிடப்படக் காரணமானார் மன்மோகன். இதை அவருடைய காங்கிரஸ் கட்சியே ஏற்காததால் அந்த சமரச முயற்சி தோல்வியடைந்தது.

நரேந்திர மோடி பிரதமரானதும் பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவை வளர்க்க ஆரோக்கியமான முயற்சிகளை மேற்கொண்டார். சிறிது காலத்துக்குப் பிறகு நிலைமை மோசமாகிவிட்டது. காஷ்மீரை ஆளும் பாஜக-பிடிபி கூட்டணியின் திறமையற்றச் செயல்பாடும், தேசிய அரசியலில் பாகிஸ்தானை அடிக்கடி இழுத்துப் பழிபோடும் செயலும்தான் சமரசம் ஏற்படாமல் தடுக்கிறது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்