தனிநபர் உரிமை என்பது முழுமுற்றானது அல்ல: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஆதார் விவகாரத்தில் முக்கியமாக மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில் தனிநபர்களின் சுய விவரங்கள், தகவல்களை சேகரிப்பதன் மூலம் தனிமனித ரகசியத்துக்கான உரிமை பறிக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் அரசியல் சாசனம் தனிமனித சுதந்திரம், தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக வாதங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு இன்று முதல் இந்த மனுக்களை விசாரிக்கும் என்று கூறியிருந்தது.

இதனடிப்படையில் இன்று உச்ச நீதிமன்றம் கூறும்போது தனிநபர் உரிமை என்பது முழுமுற்றானதல்ல, குடிமக்கள் மீது அரசு நியாயமாக ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தனிமனித சுதந்திரம் என்பது தடுக்க முடியாது எனவே ‘தனியுரிமை’ (Right to Privacy) என்பதற்கு நன்கு விளக்கமளிக்கக் கூடிய உருவமோ வடிவமோ கிடையாது என்று கருத்து தெரிவித்தது.

எனவே தனிநபர் உரிமை என்பதை ஒரு கண்டிப்பான உரிமையாக அங்கீகரிக்க முதலில் அதற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். எனவே அரசியல் சாசனத்தில் புனிதமாக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளிலும் இந்த தனிநபர் உரிமை என்பது நீக்கமற நிறைந்திருக்க சாத்தியக்கூறு அற்றது.

“தனிநபர் உரிமையை நாம் எவ்வாறு விளக்க முடியும்? அதன் உள்ளடக்கங்கள் யாவை? அதன் எல்லைகள் எது? அரசு எப்படி தனிநபர் உரிமையை ஒழுங்கு படுத்த முடியும்? ஒரு நபரின் தனியுரிமையைப் பாதுகாக்க ஒரு அரசு என்னென்ன செய்ய வேண்டும்?” என்று 9 நீதிபதிகள் குழுவில் உள்ள நீதிபதி சந்திராசூட் கேள்வி எழுப்பினார்.

மேலும் தனிநபர் உரிமை என்பதற்கு விளக்கமளிப்பது நல்லது செய்வதை விட தீங்கையே அதிகம் செய்யும் என்றார் அவர்.

எவையெல்லாம் தனிநபர் உரிமை அல்லது சுதந்திரம் என்று ஒரு பெரிய பட்டியலிட்டால் அது அந்த உரிமையையே மட்டுப்படுத்தி விடுமே என்றார் நீதிபதி சந்திராசூட்.

9 நீதிபதிகள் அமர்வு:

அட்டர்னி ஜெனரல் கேகே.வேணுகோபால் தனிநபர் உரிமை என்பது பொதுவான சட்ட உரிமையே தவிர வேறில்லை இதனால்தான் அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் தன்னுணர்வுடன் அடிப்படை உரிமைகளில் இதனை தவிர்த்துள்ளனர் என்றார்.

“பொதுவெளியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வது என்பது தங்களது தனிநபர் உரிமை, ரகசியத்தை சமர்ப்பிப்பதாகாதா?” என்று நீதிபதி சந்திரா சூட் கேள்வி எழுப்பினார்.

ஜேட்லியின் கூற்று:

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியே நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றில் தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்றும் தனிமனித சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும் கூறியிருக்கிறாரே என்று மனுதாரர்கள் தங்கள் வாதத்திற்கு பக்கபலம் கூட்டினர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “இந்த இணையதள உலகில் ஒரு தனிநபருக்கு எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது, வலுக்கட்டாயமாக்க முடியாது” என்றார். மேலும் இன்றைய உலகில் தரவுப்பாதுகாப்பே இல்லாத போது பயோமெட்ரிக் விவரங்களை எப்படி அரசு பாதுகாக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் நீதிபதி சந்திராசூட், தனியுரிமை விவகாரத்தை தரவுப்பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க முடியாது, இது ‘பெரிய தரவு’ யுகம். எனவே தனியுரிமையில் கவனம் செலுத்துவதை விட தரவுப்பாதுகாப்புக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மனுதாரர்கள் சார்பாக வாதாடிய மற்றொரு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், “தனிமனித சுதந்திரம் என்பது ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப தேர்வுகளை மேற்கொள்வதாகும். ஒருவர் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்வது, தன் பிரபையை உருவாக்கிக் கொள்வது மற்றும் செயல்கள் மதம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் நம்பிக்கை பற்றிய சுதந்திரம், கவுரவமாக வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றில் தனிநபர் உரிமையும் அடங்கும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், தனியுரிமைக்கான அரசியல் சாசன உரிமை என்பது சட்ட உரிமையை விட பரிமாணங்களில் பெரிது என்று நீங்கள் வாதிடுகிறீர்கள்" என்றார்.

நீதிபதி போப்தே கூறும்போது, “சுதந்திரம், இதில் தனிநபர் உரிமையும் அடங்குகிறது, இதுதான் அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை என்கிறீர்கள்” என்றார்.

இதற்கு கோபால் சுப்பிரமணியம் பதில் அளிக்கும் போது, “சுதந்திரம் மற்றும் கவுரவம் என்பது இந்திய அரசியல் சாசனத்தில் புனிதமாகக் கூறப்பட்டுள்ளது. சுதந்திரம், கவுரவம், தனிநபர் உரிமை ஆகியவை நம் அரசமைப்புச் சட்டத்தை புரிந்து கொள்ள அன்னியமாக முடியாத உரிமைகளாகும். ஐநா மனித உரிமைகள் தீர்மானத்தில் சுதந்திரம் என்பதே அடிப்படை” என்றார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி கூறும்போது, “பத்திரிகை சுதந்திரம் என்பதும் அரசியல் சாசனம் பிரிவு 19 (1)-ல் வெளிப்படையாகக் கூறப்படவில்லை ஆனால் அதிலிருந்து நாம் அதனை வந்தடைந்துள்ளோம். அதுபோலவே தனிநபர் உரிமை என்பதையும் பிற அடிப்படை உரிமைகளிலிருந்து நாம் தருவித்துக் கொள்ள வேண்டும்” என்றார்

அவர் கூறியதை வழிமொழியுமாறு கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, “தனிநபர் உரிமை இல்லாமல் குடிமக்கள் தங்கள் சுதந்திரத்தையும், கவுரவத்தையும் நிலைநாட்ட முடியுமா?”என்றார்.

ஆதார் அட்டை பயோமெட்ரிக் விவரங்களை சேகரிப்பது பற்றி சாடிய வழக்கறிஞர் திவான், “ஒரு நபரின் உடல் என்பது அரசுக்குச் சொந்தமானது என்பது சர்வாத்கார அமைப்பில்தான் நடக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்