கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஆதரவு! - போராட்டத்தில் குதிக்கிறது கேரள தமிழர் கூட்டமைப்பு

By குள.சண்முகசுந்தரம்

மலைக் கிராமங்களை உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க வலியுறுத்தும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி, டிசம்பர் 4-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது கேரள தமிழர் கூட்டமைப்பு.

கேரளத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழலை பாதுகாப்பது தொடர்பாக மாதவ் காட்கில் தலைமையில் 2002-ல் கமிஷன் ஒன்றை அமைத்தது மத்திய பசுமைத் தீர்ப்பாயம். 2008-ல் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 'வயநாடு தொடங்கி இடுக்கி வரை 14 மாவட்டங்களில் உள்ள 123 மலையக கிராமங்களை உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும். இந்த கிராமங்களில் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்திற்கு மேல் வரும் கட்டிடங்களை இடிப்பதுடன் அங்குள்ளவர்களையும் வெளி யேற்ற வேண்டும்' என்று பரிந்துரைத்திருந்தார் காட்கில்.

அப்போது கேரளத்தை ஆண்ட மார்க்சிஸ்ட்களும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் காட்கில் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதை மறு ஆய்வு செய்வதற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் இன்னொரு குழுவை அமைத்தது பசுமை தீர்ப்பாயம். இந்தக் குழுவும் காட்கில் அறிக்கையில் இருந்த முக்கிய அம்சங்களை அப்படியே வழிமொழிந்திருப்பதால்தான் இப்போது மீண்டும் கேரளத்தில் பிரளயம் வெடித்திருக்கிறது.

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை நவம்பர் 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதால், கேரளத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பரிந்துரைக்கு ஆதரவு

'தி இந்து'வுக்கு பேட்டியளித்த கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ''அந்த 123 கிராமங்களிலும் பெரும் பண முதலாளிகளும், பெரிய கம்பெனிகளும் ரிசார்ட்ஸ்கள் உள்ளிட்டவற்றை கட்டி வைத்திருக்கிறார்கள். மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. கஸ்தூரி ரங்கன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் இவற்றிற்கு பாதிப்பு வரும் என்பதால் தான் பதறுகிறார்கள்.

தற்போது நடக்கும் எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் பாதிரியார் செபாஸ்டின் தலைமையில் செயல்படும் சம்ரக்ஷண சமிதி முழுவீச்சில் இருப்பதன் ரகசியம் இதுதான். இவர்கள் யாருமே சாமானியர்களுக்காக போராடவில்லை. தமிழர்கள் 95 சதவீதம் வசிக்கும் தேவிகுளம் தாலுகாவில் 5 தேசிய வன விலங்கு பூங்காக்களையும் 2 வனவிலங்கு சரணாலயங்களையும் அமைக்க ஏற்கெனவே மத்திய அரசு ஆணை பிறப்பித்துவிட்டது. இது அமலுக்கு வந்தால் இரண்டரை லட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதேபோல் குரங்கனிக்கு மேலே வட்டவடை, கோவிலூர் பகுதியில் 1000 ஏக்கரில் நீலக்குறிஞ்சி சரணாலயம் அமைக்க அறுபதுக்கும் மேற்பட்ட வன, வருவாய் அதிகாரிகள் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். இதுவும் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பொன் விளையும் பூமியிலிருந்து 5000 தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

கஸ்தூரி ரங்கன் விவகாரத்தில், மனிதர்களைக் காட்டிலும் மரங்கள் பெரிதா என கேள்வி கேட்கும் மார்க்சிஸ்ட்கள், இவ்விரண்டு பிரச்சினைகளிலும் குரல் கொடுக்காதது ஏன்? அப்படியானால், தேவிகுளம் தாலுகாவிலும் வட்டவடை கோவிலூர் கிராமங்களிலும் இருப்பது மனிதர்கள் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கோரி தீவிரமான போராட்டங்களை நடத்தியவர் ஜோன்ஸ் பெருவந்தானம். தீவிரமான மலையாள இனப்பற்றாளரான இவரும் ஆர்.சி. கிறிஸ்துவர்தான். இவரே, 'நில மாஃபியாக்களுக்கு துணை போகிறவர்கள்தான் கஸ் தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை எதிர்க்கிறார்கள்' என்று உண் மையைச் சொல்லி இருக்கிறார். இதிலிருந்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை தாமதிக்காமல் அமல்படுத்த வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்களது அடுத்தகட்ட போராட்ட வடிவங்களை மாற்றுவோம்'' என்றார்.

தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வான ராஜேந்திரன் 'தி இந்து'விடம் பேசுகையில், ''யுனெஸ்கோவிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய ஆறு மாநிலங்களில் மலைகிராமங்களை அந்நிய சக்திகளுக்கு அடமானம் கொடுக்கத் துடிக்கிறது மத்திய அரசு. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு மக்கள் அங்கு எப்படி வாழமுடியும்? அதனால் தான் கடுமையாக எதிர்க்கிறோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்