ஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்
ஹைதராபாத்தில் நடந்த ஆம்னி பஸ் தீ விபத்தில் 45 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கடந்த புதன்கிழமை அதிகாலை பெங்களூரில் இருந்து ஹைதரா பாத்துக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி இறந்தனர். இந்த சம்பவம், பஸ் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்களைத் தடுப்பது பற்றிய ஆலோசகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய ஆட்டோமேட்டிவ் சோதனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
இதுகுறித்து 'தி இந்து' நிருபரிடம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆம்னி பஸ்களில் பயணிகள் கண்களில் படும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் அரசு கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். எண்கள், கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும். பஸ்ஸை டிரைவர் வேகமாக ஓட்டினாலோ, வாகனம் விபத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஒரு பயணி கருதினாலோ அந்த எண்களுக்கு அவர்கள் உடனே தகவல் தெரிவிக்கலாம்.
அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விபத்தைத் தடுக்க முடியும். இந்த நடைமுறையை கட்டாய மாக அமல்படுத்தினால் மட்டுமே ஆம்னி பஸ்களுக்கு புதிய பெர்மிட் வழங்கப்படும். பழைய பெர்மிட்டும் புதுப்பிக்கப்படும். விரைவில் இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.