கடந்த சனிக்கிழமை வழக்கம் போல், மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள போரிவெலி அருகிலுள்ள கோராய் கடற்கரை யில் காதலர்கள் குழுமி இருந்தனர். அங்கே அமர்ந்து பேசிக் கொண்டி ருந்த ஒரு காதல் ஜோடிக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் வாயில் ஆசிட்டை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார் அந்த இளைஞர். பிறகு அந்தப் பெண்ணை கடலில் தள்ளவும் முயன்றிருக்கிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆசிட் வீசியதால் ஏற்பட்ட எரிச்சல் தாங்காமல் அலறி இருக்கிறார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீரா ரோட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன், தப்பி ஓட முயன்ற ஜிதேந்திரா என்ற அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து, போரிவெலியின் டி.எஸ்.பி. மஹேஷ் பாட்டீல் கூறுகையில், "இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜிதேந்தர் வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுக்கவே அவர் ஆசிட்டை ஊற்றியதாகவும் விசாரணைவில் தெரிய வந்துள்ளது. இதனால் இளம்பெண்ணின் முகத்தில் பத்து சதவிகிதம் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆசிட் வயிற்றுக்குள் சென்றதால் என்ன நிலை என்பதை அறிய, மருத்துவர்கள் என்டாஸ்கோப் செய்ய இருக்கிறார்கள்" எனக் கூறினார்.
இருவருமே கோராய் கடற்கரை அருகே உள்ள தஹிசர் பகுதியில் வசித்து வருகிறார்கள். கல்லூரியில் பயிலும் அந்த பெண்ணுடன் ஜிதேந்தருக்கு காதல் ஏற்பட்டதாகவும், இதற்கு பெண் வீட்டாரிடம் கடும் எதிர்பு இருந்ததால் அது முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது பற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் கூறுகையில், "கடந்த பல மாதங்களாக தன்னை மணம் செய்து கொள்ளு மாறு ஜிதேந்தர் வற்புறுத்தி வந்தான். அவள் கல்லூரிக்கு செல்லும்போதும் வழி மறித்து, பொது இடத்தில் தாக்கியதுடன் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருந்தான். இதற்காக அவன் மீது போலீசில் புகார் செய்து வழக்கு பதிவாகி உள்ளது. கடற்கரைக்கு வரும்போதே, ஜிதேந்தர் திட்டமிட்டு ஆசிட்டை கொண்டு வந்திருக்கிறான்" என தெரிவித்தார். சம்பவம் நடந்த அன்று காலை ஜிதேந்தர், அந்த இளம்பெண்ணை மிரட்டி, வற்புறுத்தி மாலையில் கடற்கரைக்கு வரவழைத்துள்ளார். இளம்பெண்ணின் தந்தை தனியார் நிறுவனத்திலும், ஜித்தேந்தரின் தந்தை மகாராஷ்டிர அரசின் கடை நிலை ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஜிதேந்தரா சக்பாலை கைது செய்த போரிவெலி போலீசார், அவர் மீது ஐ.பி.சி 307 மற்றும் 326-ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை தின்தோஷியில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அக்டோபர் 24 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தர விடப்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சு, மும்பை நகரம், காதல், குற்றம்