ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளிப் பொருட்கள் மீது 28-ல் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் தொடர்பான மனு மீது வரும் 28-ம் தேதி தீர்ப்பளிப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரனைக்கு வந்தது.

ஏன் ஆஜராகவில்லை?

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுவை சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதனை ஆட்சேபிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவதற்கு உரிய மருத்துவ சான்றிதழ்களை ஏன் இணைக்கவில்லை? நீங்கள் (ஜெ. தரப்பு) தொடர்ந்து இயந்திரத் தனமாக தாக்கல் செய்யும் மனுக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அடுத்த முறை நால்வரையும் ஆஜராக சொல்லுங்கள்” என்றார்.

இதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார். அவருக்கு நிறைய பணிகள் உள்ளன. அவர் இங்கு ஆஜராவதில் நிறைய பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது. அதனால் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் இனி வழக்கில் ஆஜராக வேண்டும். நான் நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை இன்னும் பார்க்கவில்லை. நேரில் ஆஜராவதில் இருந்து அவர்களுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்கமுடியாது. ஒருவேளை அடுத்த முறை ஆஜராகத் தவறினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்” என சசிகலா தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

சரமாரி கேள்வி

இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்த 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீதான மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது பவானி சிங் வாதிடுகையில், “1996-ம் ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஜெயலலிதாவின் 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை பெற்றுச் சென்ற அவரது ஆலோசகர் வி.பாஸ்கரன் இறந்த தகவல் எனக்கு தெரியாது. இப்போது தான் அதை உறுதிபடுத்திக்கொண்டேன். இருப்பினும் அவரிடம் இருக்கும் வெள்ளிப்பொருட்களை உடனே பெங்களூர் நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகே வழக்கின் இறுதிவாதத்தை தொடங்க வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி டி'குன்ஹா சரமாரியாக கேள்விகளை கேட்டார். “1116 கிலோ வெள்ளிப் பொருட்களை இப்போது கேட்பதன் அவசியம் என்ன? அந்த வெள்ளிப் பொருட்களும் வழக்கில் குறிப்பிடப்பட்டவையா? அதற்கான சோதனை பட்டியலை தயாரித்து வைத்துள்ளீர்களா? இத்தனை ஆண்டுகளாக ஏன் அந்த வெள்ளிப் பொருட்களை கோரவில்லை?'' என கேள்விகளை தொடுத்த நீதிபதிக்கு பதில் அளிக்க முடியாமல் பவானி சிங் திணறினார்.

ஜெயலலிதா தரப்பில் எதிர்ப்பு

தொடர்ந்து வாதிட்ட ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்களுக்கு தனி சோதனைப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. அதே போல ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காலணிகள், புடவைகள், நாற்காலிகள், சூட்கேஸ்கள், கட்டில் என எவற்றுக்கும் சோதனைப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை.

எனவே எந்த பட்டியலின் அடிப்படையில் அவற்றை பெங்களூர் கொண்டுவர அரசு வழக்கறிஞர் கோருகிறார். மேலும் வழக்கு தற்போது இருக்கும் சூழலில் அரசு வழக்கறிஞரின் மனுவால் எந்தப் பயனும் ஏற்படாது. எனவே அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவை ஒருபோதும் ஏற்க கூடாது” என கடுமையாக ஆட்சேபித்தார்.

28-ம் தேதி தீர்ப்பு

இதைத் தொடர்ந்து, வெள்ளிப் பொருள்கள் தொடர்பாக அரசு வழக்கறிஞரின் மனு மீது வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் இவ்வழக்கில் மெடோ அக்ரோ நிறுவனம், ரிவர்வே எண்டர்பிரைசஸ், சைனோரா எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையும் 28-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்