அரசியல் ஆதாயத்துக்காக வி.கே.சிங் மீது பொய்ப் புகார்: பாஜக குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயம் பெறவே மத்திய அரசு ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் மீது பொய்யான புகார்களை சுமத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரிடம் நாகபுரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, ராணுவ உளவு சேவை பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வி.கே.சிங், தான் ராணுவ தலைமை தளபதியாக பதவியில் இருந்தபோது ஒமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசை கவிழ்க்க முறைகேடாக பயன்படுத்தினார் என பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்த செய்தியை சுட்டிக்கேட்டி ஜவடேகரிடம் கருத்து கேட்டனர்.

அதற்கு ஜவடேகர் பதிலளிக்கும்போது, “அரசியல் ஆதாயம் பெறுவதற்காக உளவு அமைப்புகளையும் ராணுவத்தையும் முறைகேடாக பயன்படுத்துகிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசை கவிழ்க்க வி.கே. சிங் முயற்சி செய்தார் என தான் செய்யாத ஒன்றை அவர் மீது சுமத்தியுள்ளனர். இதை ராணுவ தளபதி செய்வதற்கு என்ன அவசியம் உள்ளது.

ராணுவத்தை அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு முறைகேடாக பயன்படுத்துகிறது. இப்படி செயல்படுவது ராணுவத்தை இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும். இத்தகைய சூழ்நிலையை நமது எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றார் ஜவடேகர்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற வகுப்பு வன்முறை தொடர்பாக பேசிய அவர், “இந்த வகுப்பு மோதலுக்கு காஙகிரஸுக்கும் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கமும் காரணம்.

வன்முறை பாதிப்புக்குள்ளான இடங்களை பார்வையிட பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அனுமதி வழங்காத அகிலேஷ் சிங் அரசு, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களை அனுமதித்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார் ஜவடேகர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE