காஷ்மீரில் சமீபத்திய திருப்பம் நமது அருவருப்பான பகுதியை வெளிப்படுத்தி உள்ளது. அது காஷ்மீரைப் பற்றியோ காஷ்மீர் மக்களை பற்றியோ அல்லது இந்தியா - பாகிஸ்தான் பற்றியதோ அல்ல. இப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்குமானதாக உள்ளது. அதனால்தான் இருதரப்பும் தோல்வி - தோல்வி நிலையில் உள்ளன.
தற்போது எதனால் காஷ்மீரில் பிரச்சினை தொடங்கியது என்பதை பார்ப்போம். புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அது தவிர்க்க முடியாதது. அரசுக்கு எதிராக ஆயுதத்தை கையில் ஏந்திய முதல் நாளில் இருந்து சமூக வலைதளங்களில் தீவிரவாத பிரச்சாரம் செய்ய தொடங்கிய போதே அவர் நடைபிணமாகி விட்டார்.
இவ்வளவு நாட்கள் அவர் உயிரோடு இருந்ததற்கு அதிர்ஷ்டமும் சாமர்த்தியமும் தான் காரணம். வழக்கமாக பாதுகாப்பு படையினரின் ‘ஏ’ பட்டியலில் தேடப்படுபவர்களாக சேர்க்கப் பட்டவர்கள் 6 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ் வதில்லை. நாட்டில் யார் இறந்தாலும் நான் வருத்தப்படுவேன். ஆனால், புர்ஹான் விஷயத் தில் அனுதாபப்படுவேன். தவறான பாதையை தேர்ந்தெடுக்க அவரது நண்பர்களும் குடும்பத்தி னரும் புர்ஹானை ஊக்குவித்துள்ளனர். தீவிரவாத பாதையில் செல்ல அனுமதித்துள்ளனர். அவர் மரணத்தை அவராகவே தேடிக் கொண்டார். அதன்பிறகு பொதுமக்களும், பாதுகாப்பு படையினரும் இறந்தனர்.
காஷ்மீர் இந்தியாவின் மறுக்க முடியாத, பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்க வேண்டும். இதைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கின்றனர். அதேபோல் இங்கு பல வன்முறைகள் இருந்தாலும் பாகிஸ்தானிடம் உள்ள பகுதி அவர்களிடமே இருக்கட்டும். பாகிஸ்தான், சீனாவிடம் உள்ள இந்திய பகுதிகளை மீட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மறந்துவிடுவோம். அணுஆயுதங்கள் வைத்திருக் கும் 3 நாடுகளும் போர் மூலம் ஒருவர் பகுதியை ஒருவர் பறித்துக் கொள்ள முடியாது.
இந்த 3 நாடுகளுக்கு இடையில் காஷ்மீர் மக்கள் சிக்கி கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனை முறை போர் நடந்தாலும், (இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களால் ஒன்றை ஒன்று அழித்துக்கொள்ளும்) பாகிஸ்தானிடம் உள்ள காஷ்மீர் இந்தியாவுக்கோ, இந்தியாவிடம் உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுக்கோ கிடைக்காது.
‘ஆசாத் காஷ்மீர்’ பற்றி பாகிஸ்தானியர்கள் பேசுகின்றனர். ஐ.நா. அதை எல்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. சிம்லா ஒப்பந்தத்தை மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் ஐ.நா. தீர்மானங்களை குழியில் புதைத்தது எல்லாம் பாகிஸ்தான்தான். இந்தியா அல்ல. காஷ்மீரை கைப்பற்ற ராணுவ ரீதியாக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை முற்றிலும் தோல்வியில் முடிந்தது.
எனவே, இந்தியர்களாகிய நாம் காஷ்மீரை பற்றி கவலைப்பட தேவையில்லை. நமது ராணுவமும் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீரை காப்பதில் திறமையுடன் உள்ளது. ஆனால், காஷ்மீரிகள் விஷயம் வேறு. ராணுவம் என்பது காஷ்மீரையும் அதன் மக்களையும் காக்க வேண்டும். கோபத்தில் உள்ள மக்களின் மனதை ராணுவத்தால் மாற்ற முடியாது. முரண்டு பிடிக்கின்ற துன்பத்தில் உள்ள மக்கள் மனதில் ராணுவத்தால் இடம்பிடிக்க முடியாது.
எதிரியை வெற்றி கொள்ள நினைத்தால் ராணுவத்தை பயன்படுத்துங்கள். கருத்து வேறுபாடு கொண்ட சகோதரனின் மனதில் இடம்பிடிக்க நினைத்தால் அதற்கு பெரிய மனது வேண்டும். இது ஒத்துவருமா? ஒரு வார்த்தையில் வாஜ்பாய் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததை நினைவுகூர்ந்து பாருங்கள்.
‘‘சட்டத்திட்டங்களின்படி உங்களுடன் பேச வரமாட்டேன். மனிதநேயத்துடன் நான் உங்களு டன் பேசுவேன்’’ என்று அவர் சொன்னார். அதன் பின் 6 ஆண்டுகள் அமைதி நிலவியது. அதை மன்மோகன் சிங்கும் தொடர்ந்தார். மற்ற கூட்டணி களை போல் இல்லாமல், காஷ்மீரில் முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்ததை நாம் அதுபோல்தான் நினைத்தோம்.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் இரு நாடு கொள்கை போல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஒரு மாதிரியாகவும் மற்ற பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் வேறு மாதிரியாகவும் வாக்களித்தனர். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் செல்வாக்கு சரிந்து விட்டது.
தினந்தோறும் மாலையில் பாஜக பிரமுகர்கள் தொலைக்காட்சிகளில் விவாதத்தில் கலந்து கொள்கின்றனர். அதில், காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர். அங் குள்ள மக்களின் நிலைமைக்கு எந்த அனு தாபமும் காட்டுவதில்லை. ‘காஷ்மீர் நமக்கே சொந்தம்’ என்று மார்தட்டி பேசுபவர்கள், எதற் காக உணர்ச்சிவசப்படுகிறோம் என்று தங்களை தாங்களே கேட்டுப் பார்க்கட்டும். காஷ் மீர் பகுதிக்கா அல்லது அங்குள்ள மக்களுக்கா?
இன்னும் நேர்மையாக கூறினால், இந்துக்கள், புத்தமதத்தினரை பற்றி மட்டும்தானா? காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டுமா? இதுதான் உங்கள் விருப்பம் என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருவதைதான் நீங்களும் எதிரொலிக் கிறீர்கள் என்று அர்த்தம்.
அவர்களுக்கு காஷ்மீர் வேண்டும், காஷ்மீர் மக்களில் சிலர் (முஸ்லிம்) வேண்டும். அதேபோல் நமக்கும் காஷ்மீர் வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் வேண்டும். பிரிட்டிஷார் நமக்கு பிரித்தாளும் சூழ்ச்சியை கற்றுத் தந்துள்ளனர். நாம் பிரித்து - தோல்வி அடையும் முறையை பின்பற்றுகிறோம். இதில் மக்களை மட்டும்தான் இழக்கிறோம் நிலத்தை அல்ல என்ற ஆறுதல் இல்லை.
நமது முஸ்லிம்களில் 97 சதவீதம் பேர் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் வாழ்கின்றனர். ஜாகீர் நாயக் போன்றவர்கள் கூட காஷ்மீர் விஷயத்தில் மிகமிக எச்சரிக்கையாகவே கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது பிரச்சினையை காஷ்மீருக்குள் மட்டுமே வைத்திருக்க அரசுக்கு உதவுகிறது.
ராணுவம் உண்மையில் மதச்சார்பற்ற அமைப்பு. ஆனால், வன்முறை ஏற்படும்போது பாதுகாப்பற்ற நிலையை, சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். இப்போது காஷ்மீர் பிரச்சினையை இந்து - முஸ்லிம்களுக்கானதாக நினைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
எல்லைப் பகுதியை திறந்துவிட்டு இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தான் செல்ல விரும்பினால் போகலாம் என்று இந்தியா கூறினால் என்ன நடக்கும். ஒருவர் கூட போக மாட்டார். அதை விட பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ வரலாம் என்று நினைக்கிறேன்.
‘ஆசாத்’ கவர்ச்சியாலும், ஐஎஸ் ஆசையா லும் ஒரு சிலர் செல்வார்கள். ஆனால் பெரும் பாலானவர்கள் இங்குதான் இருப்பார்கள். எனவே, இந்து தீவிர தேசியவாதிகளுக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியை கேட்கலாம். நமது காஷ்மீரிகள் இங்கு அவர்களுடைய வீடு வாசலுடன் தங்கட்டும். விரும்பாதவர்கள் வீடு வாசலை விட்டு பாகிஸ்தான் செல்ல வேண்டுமா?
இதற்கு நியாயமான பதில் வேண்டுவது நோக்கமல்ல. ஆனால், இந்து - முஸ்லிம் என்ற அடிப்படையில் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தை அணுகுவதில் இருக்கும் ஆபத்தை கூறுகிறேன். இதன் வாயிலாக, காஷ்மீரை நாம் தக்கவைத்து கொள்ள முடியும். ஆனால், காஷ்மீரிகளை இழந்துவிடுவோம்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணைத்தலைவர்.
தொடர்புக்கு : shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago