தனி தெலங்கானா: மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜூ, கே.எஸ்.ராவ் எதிர்ப்பு
தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எம்.எம்.பல்லம் ராஜூ, கே.எஸ். ராவ் ஆகியோர் தனி தெலங்கானா உருவாக்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்தால், அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, அரசு இம்முடிவை கைவிட வேண்டும் என்று அந்த இரு அமைச்சர்களும் கூறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களை தவிர, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதியில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி, இந்த பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனி தெலங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.