வீடியோ மூலம் புகார் கூறினால் வழக்கு தானாக பதிவாகும்: பெங்களூருவில் புதிய திட்டம்

பெங்களூருவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து போலீஸார் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்த பிறகே புகார் பெறப்படுகிறது.

அதிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. பல நேரங்களில் போலீஸார் பாதிக்கப்பட்டவரிடம் புகாரை பெறாமலும் வழக்கை பதிவு செய்யாமலும் இழுத்தடிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையம் செல்வதற்கு தயங்குகின்றனர்.

வீடியோ மூலம் புகார்

எனவே போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அலட்சியங்களை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பெங்களூரு போலீஸார் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அருகில் இருக்கும் ஏடிஎம் மையம் போன்ற மையத்தில் உள்ள கேமராவின் முன்பு நின்று புகாரை தெரிவித்தால் போதும்.

கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் போலீஸ் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அதன் பிறகு அந்த வீடியோ காட்சிகள் குற்றம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து முறையாக விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். வழக்கு விசாரணை குறித்த தகவல்கள் புகார் அளித்தவருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

இத்தகைய திட்டம் ஒடிஸா மாநில தலைநகரான புவனேஸ்வரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 5 புகார்கள் வீடியோ மூலம் வருவதாக ஒடிஸா போலீஸார் கூறுகின்றனர். பெங்களூருவிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தஒடிஸா போலீஸாருடன் கர்நாடக போலீஸார் ஆலோசனை நடத்தினர்.

ஐகிளிக் வீடியோ கருவி தயார்

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:

ஒடிஸாவில் உள்ள ஏடிஎம் மைய ஐகிளிக் வீடியோ முறையிலான புகார் மையங்கள் பெங்களூருவிலும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். முன்னதாக அங்குள்ள செயல்முறை அதிலுள்ள நிறைகள், குறைபாடுகள் எல்லாவற்றையும் ஆராய்ந்தோம். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.

எனவே ஏடிஎம் மையத்தில் பொருத்த வேண்டிய கேமரா மற்றும் அதிநவீன ஆடியோ வசதியுள்ள கருவியை வடிவமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. புகார் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள்,தானாக கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறும் அதே நேரம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் வடிவமைத்து வருகிறோம்.

இந்த திட்டத்தின் மூலம் புகாரை பதிவு செய்வதில் பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் சிக்கல் முடிவுக்கு வரும். புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் போலீஸாருக்கும் பெரும் எச்சரிக்கை மணியாக இந்த கருவி விளங்கும். அதே நேரம் புகார் அளிப்பவர்களின் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE