ஒ.ப.ஒ.ஓ... தொடரும் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம்: தடுமாறுகிறதா மோடி அரசு?

By ஆர்.முத்துக்குமார்

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' (ஒ.ப.ஒ.ஓ.) கோரி தலைநகர் டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தற்போதைய பாஜக அரசு இதன் நியாயத்தை உணர்ந்திருந்தபோதிலும், நடைமுறை சிக்கல்கள் காரணமாக முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்துக்கு விடை காண முடியாது தவித்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற உறுதியை அளித்திருந்தது. தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களும், சவால்களும் தெரியவந்தன. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் தனது வானொலி உரையில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நம் இந்தியாவில் உள்ள ஒரு பிரச்சினை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நலன் கருதி செய்யப்படும் சலுகைகளை பிற பிரிவினரும் எதிர்பார்த்து போராட்டத்தில் இறங்கி விடுவதே. உதாரணமாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்காக அரசு கொண்டு வந்தால், உடனே, மத்திய காவல்படையினர், துணை ராணுவ படையினர் ஆகியோர் தரப்பிலிருந்தும் இதே கோரிக்கை எழுந்து விடும் என்று மத்திய அரசு தயங்கி வருகிறது.

சமீபத்தில் அருண் ஜேட்லி முன்னாள் ராணுவ வீரர்களின் இத்தகைய கோரிக்கையை முன்வைத்து தனது கருத்தை தெரிவிக்கும் போது, "ராணுவத்தில் பணியாற்றி குறைந்த வயதில் (35 - 38) ஓய்வு பெறும் வீரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், முன்னாள் ராணுவ வீரர்கள் கோருவதுபோல, ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க முடியாது. அதுபோல உலகில் எங்கும் ஓய்வூதியம் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படவில்லை. 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கணக்கிடுவதில்தான் சிக்கல் நிலவுகிறது" என்று தெரிவித்திருப்பதில் உண்மை இல்லாமலில்லை.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்கள், 1996-2005 வரை, 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்கள் என பிரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 2008-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் அதிக ஓய்வூதியம் பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது தற்போது.

இது குறித்து ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், "உதாரணத்துக்கு 25 ஆண்டுகால ராணுவ சேவைக்குப் பிறகு ஒருவர் 1994-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருடைய ஓய்வூதியம் மாதம் ரூ.7,000 என்று வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு ஊதியக் குழு உயர்வின் படியும் அவரது ஓய்வூதியம் அதிகரித்து தற்போது ரூ.22,000 வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

மாறாக, மேற்கூறிய நபர் வகித்த அதே பதவியில் அதே 25 ஆண்டு காலம் சேவையாற்றிய பிறகு 2014-ல் இவர் ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொண்டால், அவரது ஓய்வூதியம் தற்போது ரூ.30,000 ஆக உள்ளது. இப்போது முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது. ஒரே பதவிதான், ஒரே சேவைக்காலம்தான், ஆனால் ஒருவர் 22,000 பென்ஷன் வாங்குகிறார் என்றால், மற்றொருவர் 30,000 வாங்குகிறார்" என்றார்.



எனவே இந்த இடைவெளியை அகற்றுவதுதான் இப்போதைய முன்னாள் ராணுவ வீரர்களின் போராட்டத்தின் சாராம்சம்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் 2014-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை இடைக்கால பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.500 கோடி ராணுவ ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனையடுத்து 2014-15-ல் இது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதற்கான உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி தனது மான் கி பாத் வானொலி உரையில் கூறும்போது, "40 ஆண்டுகள் நீங்கள் பொறுமை காத்திருக்கிறீர்கள், இது ஒரு சிக்கல் நிரம்பிய விவகாரம், நாம் இது குறித்து விவாதித்து நல்ல முடிவுக்கு வருவோம் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.

இந்நிலையில், ஆண்டுதோறும் மாற்றியமைக்க வேண்டாம், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை அரசு முன்மொழிந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று போராட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இறங்கி வந்துள்ளனர்.

மாதக்கணக்கில் தொடர்ச்சியாக போராடி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இப்போது என்ன பதில் அளிக்கும் மத்திய அரசு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்