மெளனம் கலைத்த அத்வானி: நரேந்திர மோடிக்கு பாராட்டு!

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவரை வெகுவாகப் பாராட்டிப் பேசி இருக்கிறார், அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.

சத்தீஸ்கரின் கோர்பா நகரில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டத்தை எல்.கே.அத்வானி இன்று (திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாட்டை நிர்வகிக்கும் பொறுப்புக்கு நரேந்திர மோடியை தேர்வு செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எல்லாம், நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கையை அவர் மேற்கொள்வார்.

நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கும் மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றுள்ளது. இந்தப் பெருமை எனது சகாவான நரேந்திர மோடியையே சாரும். மோடியைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும், மாநிலம் முழுவதும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தி பாராட்டு பெற்றுள்ளார்.

அதே போன்று, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்கும், மக்களின் நலனிலும், இளைஞர்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இந்த மாநிலத்தை மிகை மின் உற்பத்தி மாநிலமாக மாற்றியதற்காக ரமண் சிங்கையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் பாராட்டுகிறேன்.

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைந்தபோது, மின்சாரத் துறையை ஏற்றுக்கொள்ள ஒருவருக்கும் விருப்பமில்லை என்றும், அதனால் ரமண் சிங்கே அப்பொறுப்பை ஏற்றார் என்றும் என்னிடம் கூறினர். தான் ஏற்றுக் கொண்ட பணியை ரமண் சிங் சிறப்பாக செய்துள்ளார்” என்றார் அத்வானி.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததால், அத்வானி கடும் அதிருப்தி அடைந்தார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மோடிக்கு அவர் இன்று புகழாரம் சூட்டியிருப்பது கவனத்துக்குரியது.

பிரதமர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்புக்குப் பின்பு, கடந்த மூன்று நாள்களாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அத்வானி, முதல் முறையாக சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE