திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் வனத்துறை அதிகாரிகள் 2 பேரை செம்மரக் கடத்தல் கும்பல் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்தது பற்றிய புதிய பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. சம்பவம் தொடர்பாக செம்மரக் கூலித் தொழிலாளர்கள் உள்பட 422 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை, வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் ஆகியோர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 20-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் படுகாயம் அடைந்து திருப்பதி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ரமணய்யா என்ற வனச்சரகரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் உத்தரவு
இதற்கிடையில், இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட செம்மரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தர விட்டதைத் தொடர்ந்து, போலீஸார் திங்களன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தல் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 3 குழுக்களாகப் பிரிந்து சித்தூர் மாவட்டம் பாகராபேட்டை, திருப்பதி, கடப்பா ஆகிய வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதற்கிடையில், போலீஸார் தேடும் தகவல் அறிந்து செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி மரம் வெட்டும் தொழில் செய்பவர்களும் விசாரணைக்கு பயந்து தப்பினர். ரேணிகுண்டா அடுத்த ஆஞ்சநேயபுரம் செக்-போஸ்ட் அருகே பேருந்துகளில் தப்பிச் செல்ல முயன்ற கூலித் தொழிலாளர்கள் 150 பேரை போலீஸார் கைது செய்தனர். தாக்குதல் சம்பவம் நடந்த சேஷா சலம் வனப்பகுதியில் இருந்த 45 பேரும் திருப்பதி எல்.ஐ.சி. காலனி, மங்கலம் பகுதியில் 60 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லூர் மாவட்டம் ரயில்வே கோடூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை – கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறித் தப்ப முயன்ற 67 நபர்கள் உள்பட ஒரே நாளில் 422 கூலித் தொழிலாளர்களை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் ரகசிய விசாரணை
திருப்பதியில் வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது யார், அவர்களது பின்னணியில் செயல்படும் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதலுக்கு அரசியல் கார ணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரக் கடத்தல் கும்பலைக் கண்டதும் சுட உத்தர விடப்பட்டுள்ளது.
சிகரெட்டால் சுட்டு, கத்தியால் வெட்டிய பயங்கரம்
சேஷாசலம் வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் மற்றும் 9 வனத்துறை ஊழியர்கள் சனிக்கிழமை இரவு ஜீப்பில் ரோந்து சென்ற னர். ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் நடுக்காட்டில் செம்மரக் கடத்தல்காரர்கள் 2 பேர் பிடிபட்டனர். வனப்பகுதிக்குள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர் இருப்பதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், அவர்களைப் பிடிப்பதற்காக காட்டுக்குள் சென்றுள்ளனர். வனத்துறையினர் வருவதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வந்த வாகனத்தை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கட்டைகளால் அடித்ததாலும் கற்களை சரமாரியாக வீசியதாலும் வனத்துறையினர் நிலைகுலைந்தனர். ஆயுதங்கள் இல்லாத நிலையில், வனத்துறை யினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து தப்ப முயன்றனர். 9 பேர் படுகாயங்களுடன் தப்பியோடிய நிலையில், ஸ்ரீதர், டேவிட் மட்டும் கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை கடத்தல்காரர்கள் மாறிமாறித் தாக்கினர். பின்னர் கழுத்தில் கயிறு கட்டி அவர்களை இழுத்துச் சென்றனர். மரத்தில் கட்டிவைத்து ஆடைகளை அகற்றி, மர்ம உறுப்பு உள்பட உடல் முழுக்க கத்தியால் கீறி காயப்படுத்தி உள்ளனர். காயமடைந்து ரத்தம் கொட்டும் இடத்தில் சிகரெட்டால் சூடு வைத்தும் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். கற்களாலும் கட்டைகளாலும் சரமாரியாக அடித்தே இருவரையும் கொலை செய்திருக்கின்றனர். இறந்த பிறகு அவர்களது உடல்களை உதைத்து தள்ளியும் சுற்றி நின்று பாட்டு பாடியும் விசில் அடித்தும் நடனமாடியும் வெறியைத் தீர்த்துக்கொண்ட பின் காட்டுக்குள் ஓடிவிட்டனர்.
முன்னதாக, கடத்தல் கும்பல் பிடியில் இருந்து தப்பிய கிருஷ்ணா நாயக் என்ற வனத்துறை ஊழியர் ஓடிச்சென்று ஒரு உயரமான மரத்தில் பதுங்கிக் கொண்டார். அங்கிருந்தபடியே கும்பல் செய்த அட்டூழியங்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பிறகு சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். வனத்துறை ஊழியர்களை கடத்தல் கும்பல் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றது அவரது மூலமாகவே தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago