டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் தொடங்கியது: மனோகர் பரிக்கருக்கு பாதுகாப்புத் துறை?

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசிக்க பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மாலை 4 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

மத்திய அரசில் தற்போது 22 கேபினட் அமைச்சர்களும் 22 இணை அமைச்சர்களும் உள்ளனர். அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப்பட்டு குறைந்தபட்சம் 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

பரிக்கருக்கு பாதுகாப்பு துறை?

கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது. பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய பரிக்கர், "பாஜக தலைவர் அமித்ஷா என்னிடம் பேசினார், பிரதமர் அளிக்கவுள்ள பொறுப்பை ஏற்று செயல்படுமாறு கூறினார்" என்றார்.

இதுதவிர, பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி, பிஹாரைச் சேர்ந்த எம்.பி கிரிராஜ் சிங், ராஷ்டிரீய ஜனதா தளத்தில் இருந்து விலகி பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்ற ராம் கிரிபால் யாதவ் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தங்கள் கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இடம் அளிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE