இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று விஜயன் உள்ளிட்ட 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ரகு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீதான மோசடி, ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை. எனவே, அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
1998-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் மின்துறை அமைச்சராக பினராயி விஜயன் இருந்தார். அப்போது, 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு ரூ. 92.3 கோடியை அளிக்கவில்லை என்பதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இப்போது போதிய ஆதாரமில்லாத காரணத்தால், பினராயி விஜயன், மின்துறை முன்னாள் செயலாளர் கே. மோகன சந்திரன், இணைச் செயலாளர் ஏ.பிரான்சிஸ், மின்வாரிய தலை வர் பி.ஏ. சித்தார்த்த மேனன் உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். லாவ்லின் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இதுவரை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்காமல் உள்ளார். எனவே, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உண்மை வெல்லும் - பினராயி
நீதிமன்றத் தீர்ப்பை கேட்ட பின்பு பினராயி விஜயன் கூறியதாவது: உண்மை வெல்லும் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது. தவறு செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்ததன் மூலமும் கட்சி அளித்த ஆதரவுடனும் என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தாங்கிக் கொண்டேன். ஆட்சியில் இருக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவோருக்கு இந்த வழக்கு பாடம் கற்பித்துள்ளது என்றார்.
இது அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனின் விமர்சனங்களையும் பினராயி விஜயன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு குறித்து அறிந்த அச்சு தானந்தன், இதை வரவேற்கிறேன். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர் பாக முன்வைக்கப்பட்ட கருத்துகள் இப்போது பொருத்த மற்றதாகிவிட்டன என்றார்.