ஊடகங்கள் மீது கேஜ்ரிவால், சோம்நாத் தாக்கு
டெல்லி மாள்வியா நகர் பகுதியில் ஆப்பிரிக்க நாட்டினர் போதை மருந்து விற்பனை, பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின்பேரில் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி அந்தப் பகுதியில் திடீர் சோதனை நடத்தியது சர்ச்சைக்குள்ளானது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் சோம்நாத் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் ஆஜரான போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து சோம்நாத் பாரதியிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த அமைச்சர், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு என் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பர்கா சிங் காங்கிரஸ் கட்சிக்காரர். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நிறைவுபெற்றதும் அவர் பதவி விலகியிருக்க வேண்டும். மாள்வியாநகர் பிரச்சினையை அவர் அரசியலாக்கி எனக்கு எதிராகத் திருப்புகிறார் என்றார்.
அடுத்த சில மணி நேரங்களுக்கு பின் நிருபர்களிடம் பேசிய சோம்நாத் பாரதி, 'நான் கூறியதன் அர்த்தம் அதுவல்ல. எனது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
பர்காசிங் விளக்கம்...
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பர்காசிங் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் சோம்நாத் பாரதி மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என சோம்நாத் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இல்லை. ஆணையம் முன்பு ஆஜராகாத சட்ட அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன் எனத் தெரிவித்தார். கேஜ்ரிவால் குற்றச்சாட்டு...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊடக நிறுவனங்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்தவையாக உள்ளன. அண்மையில் என்னைத் தொடர்பு கொண்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அதிர்ச்சியான ஒரு தகவலைத் தெரிவித்தார்.
அந்த தொலைக்காட்சியின் தலைவர், ஆம் ஆத்மி குறித்து எதிர்மறையான செய்தி வெளியிடுமாறு உத்தரவிட் டுள்ளாராம். பெரும்பாலான நிருபர்கள் நேர்மையானவர்கள். ஆனால், ஊடகங்களின் உரிமையாளர்களும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் நிருபர்களை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். இது உண்மையான இதழியல் பணி அல்ல. இது நமது நாடு. நாட்டு நலனில் செய்தியாளர்களுக்கு அக்கறை தேவை என்றார்.