ராகுல் கொந்தளிப்பு எதிரொலி: காங்கிரஸ் தீவிர யோசனை

By செய்திப்பிரிவு

அவசரச் சட்டத்தை கிழித்து எறிய வேண்டும் என்று ராகுல் காந்தி கொந்தளித்துள்ள நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சில வியூகங்களை வகுத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் ஆவேசம்

டெல்லியில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “இந்த அவசரச் சட்டம் குறித்து என் கருத்தை இப்போது கூறுகிறேன். இது வடிகட்டிய முட்டாள்தனம். இதனைக் கிழித்து எறிய வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. அரசியல் காரணங்களுக்காக இத்தவறு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் இந்தத் தவறைச் செய்திருக்கிறது. பாஜக, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இந்தத் தவறைச் செய்திருக்கின்றன.

காங்கிரஸும், பிற அரசியல் கட்சிகளும் இந்த முட்டாள்தனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் இது. காங்கிரஸோ, பாஜகவோ, நாட்டில் ஊழலை ஒழிக்கப் போராட விரும்பினால் இது போன்ற சின்னச்சின்ன சமரசங்களைத் தொடரக்கூடாது. ஏனெனில் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொண்டால், பிறகு எல்லா விஷயங்களிலும் சமரசம் செய்ய நேரிடும். காங்கிரஸ் என்ன செய்கிறது, நமது அரசு என்ன செய்கிறது என்பதில் நான் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆகவேதான், குற்றப்பின்னணி கொண்டவர்களைப் பாதுகாக்கும் அவசர சட்ட விஷயத்தில் நமது அரசு தவறு செய்துவிட்டது என்கிறேன்” என்று கொந்தளித்தார். அப்போது உடன் இருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன், “ராகுல் காந்தி என்ன சொன்னாரோ அது, கட்சியின் கொள்கை” என்றார்.

அமெரிக்காவில் இருந்து அறிக்கை

பொதுவாக, பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, உள்நாட்டு விவகாரங்களுக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்து வருபவர். ஆனால், ராகுல் விஷயத்தில் உடனடியாக ரியாக்ட் செய்திருக்கிறார். ராகுல் எழுப்பிய விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் சோனியா பேச்சு

ராகுல் காந்தி கொந்தளித்தத சில மணி நேரங்களில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ராகுல் விவகாரம் குறித்தே இருவரும் பேசியதாகத் தெரிகிறது. பிரதமர் நாடு திரும்பியதும் உடனடியாக இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் நிலைப்பாடு காரணமாக, அவசரச் சட்டம் விஷயத்தில் பின்வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயங்காது என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவான சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேற்று நேரில் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அவசரச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க, மத்திய அமைச்சர்கள் ஷிண்டே மற்றும் சிபல் ஆகியோரை குடியரசுத் தலைவர் அழைத்தார். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அவசரத் தேவை என்ன என்று அமைச்சர்களிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டதாகத் தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதானமான அம்சத்தை ரத்து செய்து ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும்; சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயலிழக்கச் செய்யும் வகையிலான அவசரச் சட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சில தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக சாடியிருப்பது கவனத்துக்குரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்