நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.
டெல்லியின் தால்கட்டோரா வளாகத்தில் புதன்கிழமை நண்பகல் நடந்த மாபெரும் கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவ கவுடா, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத் யாதவ், நிதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், அஇஅதிமுக, ஜார்கண்ட் விகாஸ் பரிஷத், அசாம்கன பரிஷத் ஆகிய கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனும் கலந்துகொண்டார்.
நிதீஷ்குமார் பேச்சு
இந்தக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பேசுகையில், 'மதநல்லிணக்கச் சூழலை மதவாத கட்சிகள் திட்டமிட்டுக் கெடுத்து வருகின்றன. இதை எதிர்த்து ஒன்று சேரும் கட்சிகள் தீவிரவாதத்திற்கு எதிராகவும் குரல் தர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். பாஜகவுடனான தனது கட்சியின் 17 வருட கூட்டணி முறிந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.
இது பற்றி அவர், 'மதக்கலவரத்திலும், இரத்தம் சிந்துவதிலும் சில அரசியல் கட்சிகள் லாபம் அடைய முயல்கின்றன. எனவே, எங்கள் கட்சியின் மத நல்லிணக்க கொள்கைகளை மனதில்கொண்டு சமீபத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று' என்றார்.
முலாயம் சிங்
சமாஜவாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில், 'குறைந்தபட்சம், மதவாதத்தை எதிர்ப்பதன் பெயரில் நாம் அனைவரும் ஒன்றாகக் கூடியுள்ளோம். இதே ஒற்றுமை தொடர்ந்தால் மதவாத சக்திகள் இந்த நாட்டில் தலைதூக்க முடியாது.' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தேசியவாத காங்கிரசின் சார்பில் கலந்துகொண்ட பிரபுல் படேல், 'கூட்டணிக் கட்சிகளின் காலமான இன்றைய காலகட்டத்தில், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட நாம் வாய்ப்புகளை திறந்துவைக்க வேண்டும்.' எனக் கூறினார்.
மூன்றாவது அணியா?
மூன்றாவது அணி பற்றி கருத்துக் கூறிய நிதீஷ்குமார், 'மூன்றாவது அணி பற்றிப் பேச இன்னும் காலம் முதிர்வடையவில்லை' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, 'மதவாதத்திலிருந்து நாட்டை காப்பது மட்டுமே இந்தக் கூட்டத்தின் நோக்கம்' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.பி. திவாரி, 'இதை மூன்றாவது அணியின் தொடக்கமாக எடுத்து கொள்ளலாம்' என்றார்.
ஜெயலலிதா உரை வாசிப்பு
சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கு இணக்கமாக நடந்து கொள்வதும், மற்றொரு பிரிவினரை ஒதுக்குவதும் மதச்சார்பின்மை அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இவரது உரையை அதிமுக சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வாசித்தார்.
மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல என்று தனது உரையில் கூறியுள்ள ஜெயலலிதா, 'இந்தியக் கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் அரசியலிலும் அனைத்து மதங்களின் சகிப்புத்தன்மை என்பது முக்கியமானதாக இருந்து வருகிறது. 'சர்வ தர்ம சமபாவ' (அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல்) என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அர்த்தசாஸ்திரத்தில் அரசியலுக்கும் மதத்துக்கும் இடையே உள்ள கோடு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அரசியலைத் தனியானதொரு அறிவியலாக கௌடில்யர் கூறியுள்ளார். இந்தியர்களின் மதச்சார்பின்மை 1857ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து போராடியபோதே வெளிப்பட்டது. இந்த உணர்வை நாட்டில் நாம் மீண்டும் தூண்டிவிட வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
உரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை 42 ஆவது திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. இவ்வாறு ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருந்த பண்பாடு இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் மதவாதம் அதன் ஆபத்தான கரங்களைப் பரப்பி வருகிறது. இதனால் மதமோதல்களும், மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் நமது அரசியலில் தலைதூக்கியுள்ளன.
இந்திய அரசும், பல நேரங்களில் சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் கோரிக்கைகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தது; இது இரு சாராருக்கும் ஊக்கமளித்தது. இதனால், மக்களிடம் அச்ச உணர்வும் ஆபத்தும் உருவாகியுள்ளது. பிரித்தாள்வது, பாகுபடுத்துவது, மோதல் போக்கு ஆகியவற்றில் மிகுந்த ஆபத்து உள்ளது. இவற்றை ஒழிக்க உண்மையான மதச்சார்பின்மையை நாம் கடைபிடிக்க வேண்டும்' என ஜெயலலிதா தனது உரையில் வலியுறுத்தினார்.