தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கொலை வழக்கில் பா.ஜ.க எம்.பி. கைது
குஜராத் மாநிலம் கில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக சுரங்கம் வெட்டி தாதுப்பொருள்கள் எடுக்கப்படுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக நலப் போராளியுமான அமித் ஜேத்வா. குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியைச் சேர்ந்தவரான அமித் 2010ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி உயர்நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பான விசாரணையில் ஆஜராக, ஜுனாகத் தொகுதி எம்.பி.யான தினு போகா சோலங்கி புது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
சிபிஐ அதிகாரிகள் குழு அவரிடம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தில்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அவர் புதன்கிழமை ஆஜர் செய்யப்படுவார் விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
கிர் வனப்பகுதியில் செயல்படும் சட்டவிரோத சுரங்கங்கள் பற்றி நிறைய வழக்குகளை தொடுத்ததுடன், தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து பேரெடுத்தவர் ஜேத்வா. அவர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 302-ன்கீழ் பெயர் குறிப்பிடாத நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
பாஜக எம்பி தினு போகா சோலங்கியின் உறவினர் சிவ சோலங்கி மற்றும் ஜேத்வாவை சுட்டதாக கூறப்படும் துப்பாக்கி சுடும் வீரர் சைலேஷ் பாண்டியா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
ஜேத்வா கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் நாடெங்கிலும் கிளர்ந்தெழுந்தனர். ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு இல்லை என கவலை தெரிவித்தனர்.
கொலையுண்ட ஜேத்வாவின் தந்தை பிகாபாய் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை மாநில காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை என்றும் பாஜக எம்பியை தப்பிக்கவைக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் மனுவில் பிகாபாய் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில், நியாயமாகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விரைவாகவும் விசாரணை நடைபெறவில்லை. சிவசோலங்கியும் எம்.பி. தினு போகாவும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. ஆயினும் இந்த கொலையை செய்வதற்கான சதித்திட்டம் வகுக்க இருவரும் கலந்து ஆலோசனை நடத்தவில்லை என்று வெளியாகியுள்ள அறிக்கைகளை எந்தவொரு விசாரணை அதிகாரியும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.