பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்: வேண்டுமென்றே புறக்கணிக்கிறதா இஸ்ரோ?

By டி.எல்.சஞ்சீவி குமார்

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். பிரெஞ்ச் கயானாவுக்கு நிகராக, ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து சாதக அம்சங்களையும் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ புறக்கணிப்பது விண்வெளி விஞ்ஞானிகளை மட்டுமின்றி தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் 7 பேர் குழுவை இஸ்ரோ அமைத்தது. தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

புவியியல், பாதுகாப்பு, பொருளாதாரம் என அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம்தான் சரியான இடம் என்று தெரியவந்தது. ஆனாலும் அக்குழு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்

இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழ் முதல் முறையாக விரிவாக செய்தி வெளியிட்டது. தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாய்திறக்காத அமைச்சர்

இந்நிலையில், டெல்லி சாஸ்திரி பவனில் கடந்த 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவின் சாதனைகளைப் பற்றி அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைக்கப்படும்’ என்றார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, அப்போது உடனிருந்தும்கூட இதுபற்றி எதுவும் கூறவில்லை. இது தமிழக விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

உயர்நிலைக்குழு கண்துடைப்பா?

இதுகுறித்து தமிழக விஞ்ஞானிகள் கூறியதாவது:

எங்களுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம் என்ற பாகுபாடு இல்லை. ஆனால், அறிவியல், புவியியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியாக மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான சிறந்த இடம் குலசேகரப்பட்டினம்தான்.

உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரி நெருக்கக் கோணத்தில் இருக்கும் பிரெஞ்ச் கயானா. ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக்கிறது. குலசேகரப்பட்டினமோ 8 டிகிரியில் இருக்கிறது.

மேலும், உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, இஸ்ரோ தலைவர் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அக்குழுவில் தமிழர் ஒருவர் மட்டுமே உள்ளார். எனவே, அக்குழுவும் கண் துடைப்புக்காகவே அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது

இவ்வாறு தமிழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆதரிக்காத கட்சிகளுக்கு எச்சரிக்கை

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை வலியுறுத்துவதற்காக அரசியல் மற்றும் தொழில் பிரமுகர்கள் அடங்கிய தென் தமிழகத்துக்கான வளர்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளரான பெப்ஸி முரளி கூறுகையில், ‘‘குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏவுதளம் அமைக்கும் பட்சத்தில் ஈரோடு அல்லது சேலத்தில் ராக்கெட்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் டிராக்கிங் சென்டர் அமைக்கப்படும். தமிழகத்தில் Defence Research and Development Organisation அமைக்கப்படும். ஆனால், இஸ்ரோ அதிகாரிகள் சிலர் தமிழகத்தைப் புறக்கணிக்கும் நோக்கத்தில் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத கட்சிகளை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்