உ.பி: முசாபர்நகரில் அகிலேஷ் யாதவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வன்முறை பாதிப்புக்கு உள்ளான முசாபர்நகர் மாவட்டத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார். அவரை கண்டித்து கிராம மக்கள் முழக்கம் எழுப்பியதுடன் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கவால் கிராமத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி இளம்பெண் ஒருவர் பிறரால் கேலி செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக மோதல் ஏற்பட்டு 3 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் மாவட்டம் முழுவதும் வன்முறை பரவி 47 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையை அடக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் தவறியதாக எதிர்க்கட்சிகளும் சிறுபான்மை இனத் தலைவர்களும் குறை கூறினர்.

இந்நிலையில் முசாபர்நகர் மாவட்டத்துக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் முதல்வர் மீது வெறுப்பு கொண்டு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் கருப்புக்கொடிகளை காட்டினர்.

மாவட்டத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில நிர்வாகம் தவறிவிட்டது என்று கூறிய அவர்கள், தாங்கள் கொடுத்த புகார் மனுவை யாதவ் வாங்கவில்லை என்றும் சம்பந்தப்படாத வெளியாட்களை மட்டுமே அவர் சந்தித்துப் பேசியதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய அகிலேஷ், மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறை வேதனை தரக்கூடியது. அதில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் அல்லாமல் எங்களுக்கும் வருத்தத்தைத் தருகிறது. அமைதி ஏற்பட அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். அமைதியை குலைப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உறுதியாக உள்ளது என்றார்

கவால் கிராமத்துக்குச் சென்ற முதல்வர் அங்கு பார்வையிட்ட பிறகு மாலிக்புரா, காந்தலா ஆகிய பகுதிகளுக்குச் சென்றார்.

முசாபர்நகர் மாவட்டத்துக்கு நேரில் வந்து நிலைமையை நேரில் மதிப்பிட பிரதமர் மன்மோகன் சிங் வர உள்ள நிலையில் அகிலேஷின் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. மாநில சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரும் தொடங்க உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து முதல்வருடன் பிரதமர் மன்மோகன் சிங் விவாதிப்பார் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE