மோடிக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பேன்: நிதிஷ் குமார்
பாட்னாவில் நடைபெற்ற பாஜக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்தத் தலைவருமான நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், தனது பிரதமர் கனவுக்காக தனது மாநில மக்களையும் காட்டிக் கொடுக்கத் தயாராகிவிட்டார் என்றும் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார்.
அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இந்த (குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள) சந்தர்ப்பத்தில் அது பற்றி பேச இயலாது. இதற்கு அர்த்தம், நான் எதையும் கூற விரும்பவில்லை என்பதல்ல. உரிய நேரத்தில் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு பதிலளிப்பேன்" என்றார் நிதிஷ் குமார்.
முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பு குறித்து கூறும்போது, "மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து, அச்சுறுத்தும் நோக்கோடு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜக பேரணியை குறிவைத்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கலாம். ஆனால், அதற்காக அரசியல் கட்சியொன்றின் பேரணியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்றார் நிதிஷ் குமார்.