மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மத்தியில் வெளியாகும்: தேர்தல் ஆணையர் சம்பத்

By செய்திப்பிரிவு

16-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலை 5, 6 அல்லது 7 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் மார்ச் மாத மத்தியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: “2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டோம். இந்த தேர்தலில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 11 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். இத்தேர்தலில் 78 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் மாதம் மத்தியில் தொடங்கும். 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். 16-வது மக்களவைக்கான தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறும். இந்தியாவில் கடினமான சூழ்நிலை நிலவிய காலத்தில் கூட, தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இப்போதைய மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அடுத்த மக்களவை உறுப்பினர்களை ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்த மக்களவைத் தேர்தல் 5, 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தப்படும். அது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு 6 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாள் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஒரு மாத காலத்துக்குள் புதிய பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு வரை விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு, தவறான பெயர்கள் நீக்கம் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யவுள்ளோம். சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து, வாக்குச் சாவடிகளின் நிலை, பாதுகாப்பு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், வாக்குப் பதிவுக்கான பொருள்கள், ஊழியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டங்களின்போது ஆலோசனை செய்யப்படும்.

தேர்தல் தேதிகளை முடிவு செய்யும் முன்பு, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்படும். பருவ நிலை தொடர்பாக வானிலை

ஆய்வு மையத்துடனும், மாணவர்களின் தேர்வு தொடர்பாக கல்வித் துறையுடனும், முக்கிய பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்தையும் உத்தேசித்தே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.

தேர்தலின்போது வேட்பாளர் களின் செலவு கணக்கை கண்காணிக்க ஏற்கெனவே தேர்தல் கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது பணம் வாங்கி செய்தி வெளியிடுவது மோசமான செயலாகும். செய்தி வெளியிட பணம் அளித்தால், அதுவும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக செலவு செய்யும் வேட்பாளர், எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் தகுதி இழப்பு செய்யப்படுவார்.

வெளிநாட்டு இந்திய வாக்காளர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இணையத்தை பயன்படுத்தலாம் என யோசனை கூறப்படுகிறது. ஆனால், அதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, இணையத்தை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக சிலர் புகார் கூறிவரும் நிலையில், எவ்வாறு இணையத்தின் மூலம் வாக்குப் பதிவை நடத்த முடியும்? இப்போதைக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் மட்டுமே தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்தபடி வாக்களிக்க வழியில்லை. அவர்கள் வாக்குப் பதிவில் பங்கேற்க விரும்பினால், தேர்தலின்போது இந்தியாவுக்கு வந்து வாக்களிக்கலாம்.

வெளிநாடுகளில் லட்சக்கணக் கான இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆனால், இப்போது வரை 11 ஆயிரம் பேர் மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களை தபால் மூலம் வாக்களிக்க வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சட்டப்படி தபால் மூலம் வாக்களிக்க அவர்களுக்கு தகுதியில்லை.

முன்கூட்டியே வாக்களிக்கும் முறை

அமெரிக்காவில் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்காளர்கள் தங்களின் வாக்கை செலுத்தக் கூடிய வசதி உள்ளது. இது வாக்குப் பதிவு நாளின்போது, தங்களின் தொகுதியில் இருக்க இயலாத வாக்காளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால், இந்த நடைமுறையை இந்தியாவில் கொண்டு வர இயலாது. சட்டமும், அங்குள்ள தேர்தல் நடைமுறையும் அதை அனுமதிப்பதில்லை. வாக்குப் பதிவுக்கு ஒரு நாளுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வாக்காளர்கள் சிந்திக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருப்பதே இதற்கு காரணம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்