மதுக்கடைகள் மூடலால் சுமார் 10 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்: நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து சுமார் 10 லட்சம் பேர் நாடு முழுதும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கவலை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் உள்ள 5,700 மதுபானக் கடைகளில் 3,300 மதுபானக் கடைகள் மூடுவிழா கண்டது. இதனால் மீதமிருக்கும் கடைகளில் நேற்று நீண்ட நெடும் வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் சென்றனர் வாடிக்கையாளர்கள்.

ஆனால் நெடுஞ்சாலை ஓரங்களில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் மதுபானக் கடைகள் வரும் என்ற பயத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அடுத்து நாடு முழுதும் சுமார் 50,000 மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவினால் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். சுற்றுலாத்துறை என்பது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும், எனவே இதை ஏன் கொல்ல வேண்டும்?” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக சில ஆங்கில கட்டுரை இணைப்புகளையும் கொடுத்துள்ளார்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கலால் வரிப்பிரிவில் வருவதால் அந்த மாநிலங்கள் மட்டும் செப்டம்பர் இறுதி வரை நெடுஞ்சாலை மதுபான கடைகள், விடுதிகளில் மது விற்பனையைத் தொடரலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE