பிரதமருக்கு ஒட்டுமொத்த காங்கிரஸும் ஆதரவு

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக, அவருக்குப் பின்னால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் நிற்கிறது என்பதை பாஜகவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை விமர்சித்து ராகுல் பேட்டியளித்தார். இதையடுத்து பிரதமரை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார் என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் பிரதமருக்கு முழு ஆதரவு அளிப்பதாக சோனியா கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மாண்டியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் சோனியா காந்தி பேசியதாவது: ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக உள்ளது என்பதை பாஜகவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை பாஜகவினர் இகழ்ந்து பேசுகின்றனர். எங்கள் கட்சியையும், பிரதமரையும் கிண்டல் செய்கின்றனர்.

மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் தாக்குதலைப் பார்த்து நாங்கள் அஞ்சவில்லை. எங்களின் பாதையில் தொடர்ந்து செல்வோம்.

பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது; நாங்கள் அனைவரையும் இணைக்கிறோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிகழ்த்திய சாதனைகளை இதுவரை வேறெந்த அரசும் செய்ததில்லை. பல வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்களை காங்கிரஸ் கூட்டணிதான் நிறைவேற்றியது. இது போன்ற சாதனைகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை?

குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கொண்டு வந்ததன் மூலம், விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது என்ற நிலையை கொண்டு வந்துள்ளோம்.

பல லட்சம் மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தது காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலிலும், சமீபத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றி அளித்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி, விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன், பாசனத் திட்டங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஆகியவற்றை முதல்வர் சித்தராமய்யா தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார் சோனியா காந்தி.

சமீபத்தில் மாண்டியா, பெங்களூர் ஊரகம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE