இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், சமூக நல பெண் அமைப்புகளை அணுகிய பிறகு புதன்கிழமை விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவா மாநில போலீஸார் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவுள்ளனர் என்று கூறப்படுகிறது. எனவே, எந்த நேரத்திலும் தேஜ்பால் கைதாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து தருண் தேஜ்பால், தெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு ஒரு ஈமெயில் அனுப்பியுள்ளார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரிடம் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, தான் மேலும் பிராயச்சித்தம் தேட தான் கடமைப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள தேஜ்பால், தனது ஆசிரியர் பதவியிலிருந்து 6 மாதங்களுக்கு விலகி இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இதில் திருப்தியடையாத பெண் பத்திரிகையாளர், அலுவலகத்தில் முறையான பாலியல் குற்றத் தடுப்புக் குழுவை அமைத்து தன் வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரியிருக்கிறார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு இதற்கிடையே, நிர்வாக ஆசிரியரான ஷோமா சௌத்ரி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசி முடித்தாகி விட்டது. இதற்காக, தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரும் திருப்தி அடைந்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் ஒருவரான முற்போக்கு பெண் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரான கவிதா கிருஷ்ணா, 'தருண் தேஜ்பால் மிகவும் சாமர்த்தியமாக நிர்வாக ஆசிரியருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார். அதில் அவர் மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிடவில்லை. இந்தப் பிரச்சனையில் ஒரு நல்ல நீதி கிடைக்கும்வரை விட மாட்டோம்' என்றார்.
கோவாவில் விசாரணை...
இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நவம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை கோவாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலில், 'யோசனை விழா' என்ற பெயரில் தெஹல்கா நடத்திய கூட்டத்தின்போது நடந்துள்ளது.
எனவே, கோவாவின் காவல்துறை கண்காணிப்பாளரான பிரியங்கா, சம்பவம் நடந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு கடிதம் எழுதி கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை கேட்டிருக்கிறார்.
இது சம்பவத்திற்கான முக்கிய சாட்சியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் சம்மந்தப்பட்டவர்களால் பறிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்களையும் கோவா போலீஸ் ஆராய இருக்கிறது.