உள்ளாட்சி அமைப்பின் உரிமையை மீட்கப் போராடுவேன்: காஷ்மீரில் ராகுல் உறுதி

By செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தலைமை வகிப்போரின் உரிமையை மீட்டெடுக்க போராடுவேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். ஜம்முவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்ற அவர், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுடன் உரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், "பஞ்சாயத்து ராஜ் தொடர்பான 74-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உங்களின் உரிமையை மீட்டெடுக்க நான் போராடுவேன். இது தொடர்பாக மாநில அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். உங்களின் போராட்டத்துக்குப் பக்கபலமாக இருப்பேன்.

21-ம் நூற்றாண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் பரவலாக்கப்படும். முடிவுகள் அனைத்தும் கிராமங்களில் எடுக்கப்படும். இதுதான் வருங்கால அரசியலாக இருக்கும். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமானால், முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் சலசலப்பு...

இதனிடையே, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு குறுக்கே புகுந்த பரிக்ஷித் சிங் என்ற பஞ்சாயத்து தலைவர் "தங்களுக்கு பாதுகாப்பு இல்லை" என ஜம்மு-காஷ்மீர் அரசு மீது புகார் கூறினார். இதனால், அந்தக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அவரது புகாரை கவனமாகக் கேட்ட ராகுல், "உங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம். இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்ற பிறகு சலசலப்பு அடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE