சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்த திமுக சதி: உச்ச நீதிமன்றத்தில் ஜெ. புகார்

By செய்திப்பிரிவு



பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆஜரானார். 'பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் எங்கள் தரப்பு வாதம் முடிந்துவிட்டது. அடுத்து அரசுத் தரப்பு வாதம் தொடங்கும் நிலையில் வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என புதிதாக ஒரு வழக்கை தொடுத்து பிரச்சினை செய்கின்றனர். இந்த வழக்கை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்வரை இழுப்பது என்பதே இதன் நோக்கம்" என சேகர் நாப்டே வாதாடினார்.

திமுகவின் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு ஆதரவாக கர்நாடக அரசு செயல்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க கர்நாடக அரசின் சட்டதிட்டங்களில் இடமும் உள்ளதாகவும் நாப்டே கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங், பதவி நீக்கம் செய்யப்பட்ட பவானி சிங், வழக்கில் ஆஜராகும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றம் சுமத்தினார். இதற்கு ஆதாரமாக அரசு தரப்பில் குறிப்பிட்ட சில சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய பவானி சிங் மறுத்துவிட்டதாகவும், இது குறித்து அவர்கள் தொடுத்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் விகாஸ் சிங் கூறினார்.

இந்த வழக்கில், அரசு தரப்பு அட்டர்னி ஜெனரல் வாஹன்வாதி விரிவாக வாதிட விரும்பியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, திங்கள்கிழமை வழக்கு விசாரணை தொடங்கியவுடன், பவானி சிங் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் சமர்ப்பித்தார். இதை ஆய்வு செய்த நீதிபதிகள் பாதி ஆங்கிலம், மீதி கன்னட மொழியில் இருப்பதாகவும், பவானி சிங்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பள தொகை மிகவும் அதிகம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

வழக்குப் பின்னணி...

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை விசாரித்து வரும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தனது வழக்கின் தீர்ப்பு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கு முடியும் வரை நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவியை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இத்துடன் அவரது வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்தும் மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்