காமன்வெல்த் மாநாடு எதிர்ப்புகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது: ப.சிதம்பரம்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்று சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முடிவு செய்ய இன்னும் அவகாசம் இருக்கிறது.

மன்மோகன் சிங் இலங்கை செல்வாரா என்பதை அரசு முடிவு செய்யும். இதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். பிரதமர் செல்லக்கூடாது என சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது எனக்கு தெரியும்" என்றார் சிதம்பரம்.

முன்னதாக, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் பல போராட்டங்கள் குறித்தும், அது பற்றிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது பற்றியும் பிரதமரிடம் வியாழக்கிழமை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE