ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு

By சேகர் குப்தா

சுவரில் எழுதிய சித்திரம் போல’ என் றொரு சொலவடை உண்டு. கிராமங் கள், நகரங்கள் வழியாக நீங்கள் பயணம் செல்லும்போது நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை நேரிலேயே உணர முடியும். அதைத்தான் ‘சுவரில் எழுதிய சித்திரம்’ என்பார்கள். இந்தியாவில் அதிலும், இந்திய அரசியலில் மாற்றங்களுக்கு என்றுமே குறைவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் இதயம், சுவர்களில்தான் என்றாலும் மிகையில்லை.

சுவர் என்றால் சுவர் என்று மட்டும் பொருள் இல்லை. குஜராத் நெடுஞ்சாலைகளில் தெரியும் ஆலைகளின் வரிசையிலும், காஞ்சிபுரத்தில் உள்ள பெரியார் சிலையின் அடிப்பகுதியிலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த மக்களின் புன்சிரிப்புகளிலும் கூட இந்த மாற்றங்களைப் படிக்கலாம்.

இந்தப் புன்சிரிப்பு வழக்கமானது அல்ல; தன்னிகரற்றது. விவரிக்க முடியாத ஆர்வம், ஈர்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டது. பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் வாக்காளர்களின் முகங்களில் இதைப் பார்க்கும்போது ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படப்போகிறது என்பது நிச்சயம். 1990-களில் வி.பி.சிங், ராஜீவ் காந்திக்குப் போட்டியாளரானபோது இதைப் பார்த்தோம், 2014-ல் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில் பார்த்தோம், பிஹாரில் நிதீஷ் குமார் கூட்டங்களிலும் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வந்த கூட்டத்தினர் முகங்களிலும் பார்த்தோம். 2015-ல் டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கூடிய கூட்டத்தினரிடையே பார்த்தோம். இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் வாக்காளர்களின் மனநிலையை உணர்த்த புன்னகையே போதுமானதாக இருந்திருக்கிறது. இப்போது பஞ்சாபில் இந்தப் புன்னகை காணப்படுகிறது.

இந்து சீக்கியர், ஆண்கள் பெண்கள் - குழந்தைகள் ஆகியோரின் முகங்களில் புன்னகை தெரிவதை சுவர்களில், உப்பரிகைகளில், வீட்டு முகப்புகளில், திறந்திருக்கும் ஜன்னல்களில் காண முடிகிறது. பஞ்சாபிலேயே செல்வவளம் மிக்க நகரான லூதியானாவில்தான் இந்தக் காட்சி. ஆம் ஆத்மி கட்சியின் (ஆஆக) தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு வார்த்தை பேசுவதில்லை. ஏராளமானவர்கள் பின்தொடர பிரச்சார ஊர்வலத்தில் செல்கிறார். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகப் பார்த்து கையசைக்கிறார். முகத்தில் புன்முறுவல். உங்க ளுடைய வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள் என்று அதில் கோரிக்கை. யார் கூட்டம் போட்டாலும் ஊர்வலம் சென்றாலும் கூட்டம் சேரும். ஆனால் சாலையின் இரு பக்கங்களிலும் கூடி நிற்கும் மக்களுடைய முகங்களில் தெரியும் புன்னகை, மாற்றம் ஏற்படப் போவதை உணர்த்துகிறது. நான் சொல்வதைக் கேட்டு வாக்குக் கணிப்பாளர்கள் எரிச்சல் அடையலாம். அறிவியல்பூர்வமான அவர்களுடைய கலையை, என்னுடைய முந்தைய அனுபவ அடிப்படைச் சம்பவங்களைக் கொண்டு நிராகரிக்க விரும்பவில்லை. எனவே மார்ச் 11 தேர்தல் முடிவு வரும் நாளில் எந்தக் கட்சி பஞ்சாபில் ஆட்சிக்கு வரும் என்று நான் கூறப்போவ தில்லை. 1989-ல் வி.பி. சிங்கின் ஜனதா தளத்துக் குப் பிறகு எல்லா மாநிலங்களிலும் பரவக்கூடிய புதிய கட்சியை இப்போது பார்க்கிறேன். ஜனதா தளம் அப்போதிருந்த சோஷலிஸ்ட் ஆதரவாளர்கள், சாதீயக் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது. ஆம்ஆத்மி கட்சி அப்படியல்ல; அடித்தளத்திலிருந்து உருவானது.

பஞ்சாபின் அரசியல் கடந்த 70 ஆண்டுகளாகச் சொல்லி வைத்தார்போலவே தொடர்கிறது. மொழி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பஞ்சாப் 1966-ல் பிரிக்கப்பட்டது. பிறகு 1983 முதல் 1993 வரையில் பயங்கரவாத சம்பவங்களுக்குக் களமாக இருந்தது. அகாலிகளும் காங்கிரஸும்தான் மாறி மாறி ஆட்சி செய்தன. அகாலிதளத்திலிருந்து பிரிந்த கட்சிகளால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. சில மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலில் இருந்தது. இடதுசாரி களுக்கு இங்கே சில ஆதரவுக் கோட்டைகள் இருந்தன. ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இங்கிருந்து புறப்பட்டவர்தான். கான்சிராமும் பஞ்சாபி, இங்கிருந்துதான் அரசியலுக்கு வந்தார். பஞ்சாபில் பட்டியல் சாதியினர் எண்ணிக்கை மக்கள் தொகையில் 32.4% ஆக இருந்தும் இங்கே அரசியல் சக்தியை உருவாக்க அவரால் முடியவில்லை. பிந்தரன்வாலேயும் அவரது ஆதரவாளர்களும் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது பேசப்பட்டாலும் மக்களுடைய பேராதரவைப் பெறும் வகையில் இல்லை.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஆஆக முழுக்க முழுக்க வெளியாட்களைக் கொண்ட கட்சி. அதற்கு இப்படியொரு வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதன் தலைவர் பஞ்சாபியல்ல, அவருடைய மதமும் சீக்கியம் அல்ல. அவருடைய சாதியினரும் பஞ்சாபில் கணிசமாக இல்லை. ஹரியாணாவைச் சேர்ந்தவர் கேஜ்ரிவால். ஹரியாணாவுடன் பஞ்சாபுக்கு தண்ணீர் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் பிரச்சினை இருக்கிறது. பஞ்சாபின் சீக்கியர்கள் ஆஆகவுடன் அடையாளப்படுத்திக் கொள்ள ஏதுமில்லை என்பதுடன் அக்கட்சியின் சித்தாந்தமும் யாருக்கும் புரியவில்லை. “அர்விந்த் கேஜ்ரிவால் பஞ்சாபியாக இல்லாவிட்டால் என்ன, அவர் கனடாவையோ லண்டனையோ சேர்ந்தவர் இல்லையே, பாரதத்தைச் சேர்ந்தவர்தானே” என்கிறார் ஷெவாத் சிங்.

எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் பண மதிப்பு நீக்கம் எல்லோரையும் கடுமையாக பாதித்துவிட்டது என்பது. பருத்தி, கோதுமை களஞ்சியம் வழியாகப் பயணப்படும்போது இக்கருத்து வலுவாக எதிரொலிக்கிறது. மவுர் மண்டி என்ற ஊரில் இரண்டரை ஹெக்டேர் நிலம் வைத்துள்ள மித்து சிங் தனது நிலத்தில் விளைந்தவற்றை ரூ.1.10 லட்சத்துக்கு விற்றார். ஆனால் வாரத்துக்கு 10,000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அமிர்தசரஸிலிருந்து லூதியானாவுக்கு, பிறகு தெற்கில் பதிண்டா, பாட்டியாலாவுக்குச் செல்லும்போது ஆஆக மற்றும் துடைப்பம் என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் கேட்க முடிகிறது. காங்கிரஸ் - அகாலி, கேப்டன் பாதல் என்ற வார்த்தைகள் எப்போதாவதுதான் கேட்கின்றன. அகாலிகளைப் பற்றி ஒருவர் கூட நல்ல வார்த்தை கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் பலர் மவுனமாக இருப்பதைக் காண முடிகிறது, வாக்குக் கணிப்பாளர்களால் இவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல. ஆஆகவுக்கு பஞ்சாபின் ஒரு பகுதியில் மட்டும்தான் செல்வாக்கு என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.

தேசிய ஊடகங்கள் பஞ்சாபை மூன்று நிலப் பிரிவாகப் பிரித்துள்ளன. பியாஸ் நதிக்கு மேற்கில் உள்ளதை ‘மாஜா’ என்கின்றனர். பியாஸ் சட்லெஜ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ‘தோபா’ (இரு நதிகளுக்கு இடையில் உள்ள பகுதி) என்றழைக்கப்படுகிறது. சட்லெஜுக்குக் கிழக்கிலும் ராஜஸ்தான் ஹரியாணாவை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் உள்ள பஞ்சாப், ‘மால்வா’ என்று அழைக்கப்படுகிறது. மால்வா பகுதியில் 69 பேரவைத் தொகுதிகள் உள்ளன. மால்வா பகுதியில் ஆஆகவுக்கு உள்ள செல்வாக்கு பூகோள ரீதியாக மற்ற பகுதிகளுக்கு பரவாது என்று கருதுவது தவறு. மால்வாவில் ஓடும் வாய்க்கால்களும் காணப்படும் சாலைகளும் கிடைக்கும் தடையில்லா மின்சாரமும் பிற மாநிலங்களின் ஏழைகளைப் பொறாமைப்பட வைக்கும். இந்த வளர்ச்சிக்கு பாதல்களின் பங்களிப்பும் இருந்திருக்க வேண்டும்.

2017 பொதுத் தேர்தலில் இவையெல்லாம் முக்கியமில்லை. அகாலிதள கூட்டணி ஆட்சிக்கு மாற்று என்றால் இயல்பாகவே கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ்தான் மக்களுடைய தேர்வாக இருந்திருக்க வேண்டும். ஆஆக இப்போது காட்சியை மாற்றிவிட்டது. பஞ்சாபிகள் இப்போது சாகசத்துக்குக் தயாராகிவிட்டனர். வாக்குக் கணிப்பாளர்களின் ஊகம் சரியாகவே இருந்தாலும், பஞ்சாப் தேர்தலில் ஆஆக முதலிடத்தைப் பிடித்தாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், புதிய தேசிய அரசியல் சக்தியாக உருவாகி வருகிறது. தேசிய அரங்கிலும் இது எதிரொலிக்கும். அடுத்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் இதன் விளைவுகளைக் காண முடியும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்