தலித்துகளையும் பழங்குடிகளையும் பின் தங்கிய சமூகத்தினைரையும் அரவணைத்து தேச முன்னேற்றம் காண்போம் என நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரை மூலம் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
"நாடு சுதந்திரம் பெற தியாகங்கள் பல புரிந்த மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு இன்னும் எண்ணற்றோரை இந்நாளில் நினைவுகூர்வோம். இன்றைய தினம் நான் கொள்கைகள் பற்றி பேசப்போவதில்லை தொலைநோக்குத் திட்டம் குறித்து பேசப்போகிறேன்.
இந்திய தேசம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணும் திறன் தேச மக்களிடம் இருக்கிறது. இந்தியாவை இதற்கு முன் ஆண்ட அரசை சுற்றி சந்தேக வலைகளே இருந்தன. ஆனால், தற்போதைய அரசைச் சுற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன. சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது. சாமான்யர்கள் மேம்பாட்டை பொறுப்புணர்ச்சியுடன் அரசு நிகழ்த்தி வருகிறது. நாட்டில் இரண்டு கோடி மக்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கின்றனர். ஏழை மக்கள்கூட ஓரிரு வாரங்களில் எளிமையாக பாஸ்போர்ட் பெற முடிகிறது.
இதற்கு முந்தைய காலங்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பதிவு செய்வதற்கே ஆறு மாதங்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜூலை மாதத்தில் மட்டும் 900 தொழிலதிபர்கள் இங்கு புதிய தொழில் தொடங்குவதற்காக பதிவு செய்துள்ளனர்.
குரூப் சி, டி பிரிவுக்குட்பட்ட 9000 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளில் அரசாங்கம் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் மாறியுள்ளன. கொள்கை அறிவிப்புகளும், பட்ஜெட் அறிவிப்புகளில் அவர்கள் சமரசம் அடைந்துவிடுவதில்லை. கொள்கைகளுக்கும், திட்டங்களையும் எப்படி அரசு செயல்படுத்தியிருக்கிறது என்பதை நேரில் காண விரும்புகின்றனர்.
அந்தவகையில், முன்னர் நாளொன்றுக்கு சராசரியாக 55 முதல் 77 கி.மீ. அளவில் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டன. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 100 கி.மீ. அளவுக்கு கிராமங்களில் சாலைகள் நிறுவப்படுகின்றன.
சூரிய எரிசக்தித் துறையில் 116% வளர்ச்சி கண்டுள்ளோம். நாள் ஒன்றுக்கு 30,000-35,000 கி.மீ. மின்சாரம் செலுத்தும் தடங்கள் நிறுவப்பட்டன. தற்போது அது நாள் ஒன்றுக்கு 50,000 கி.மீ. ஆக இருக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில் சமையல் எரிவாயு 14 கோடி மக்களுக்கு கிடைத்து வந்தது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 4 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது.
நமது எதிர்மறை எண்ணங்களை நாம் விட்டொழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள 18,000 கிராமங்களில் 10,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த சுதந்திர தின உரையை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். டெல்லியில் இருந்து வெறும் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஹத்ரஸ் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைக்க 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எல்.இ.டி. விளக்குகளை வெறும் ரூ.50-க்கு கிடைக்கச் செய்துள்ளது இந்த அரசு.
சப்பார் துறைமுகத்துக்காக இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைந்துள்ளது சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கியுள்ளதற்கான சான்று.
நாட்டின் பணவீக்கத்தை 6%-த்துக்கு மிகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. பருப்பு விலை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இருந்தும் அரசாங்கங்கள் அந்த நெருக்கடியை மிக சாமர்த்தியமாகக் கையாண்டது. ஒரு ஏழையின் சாப்பாட்டுச் செலவு அவன் கைக்கெட்டாத சூழலுக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டது இந்த அரசு.
குரு கோவிந்த் சிங்கின் 350-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் தருணத்தில் அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது. "அடுத்தவர்களுக்காக தொண்டாற்றாத கரங்கள் எப்படி புனிதமானதாக கருதப்படும்" என்றார் அவர். நமது விவசாயிகள் கடும் வறட்சியைத் தாண்டியும் முன்பைவிட 1.5 மடங்கு அதிகமாக பருப்பு வகைகளைப் பயிரிட்டுள்ளனர்.
நமது விஞ்ஞானிகள் அதிக மகசூல் தரக்கூடிய 117 வகை விதைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரங்களுக்கான தட்டுப்பாடு இத்தேசத்தின் பழைய வரலாறாகிவிட்டது.
அரசு கஜானாவை காலி செய்வது முந்தைய அரசுகளின் பாரம்பரியமாக இருந்தது. ஆனால், நான் அத்தகைய நிலையை மாற்றியிருக்கிறேன். உலக நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைவிட நமது அடையாளம் நாம் எதை முன்னிறுத்துகிறோம் என்பதே முக்கியம். கட்சியைவிட தேசமே முக்கியம்.
அரசின் கொள்கைகளில் தெளிவு இருந்தால், அரசின் நோக்கத்தில் தெளிவு இருந்தால் முடிவுகள் தடையற்றதாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பது வழக்கமான கதையாக இருக்கும். இன்று என்னால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும் உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை 95% பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது என்று.
உஜ்வால் யோஜனாவின் கீழ் 50 லட்சம் வீடுகள் புகையில்லா அடுக்களைகளைப் பெற்றுள்ளது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதால் நமது பொருளாதாரம் வலுப்பெறும். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மருத்துவச் செலவை அரசு ஏற்கும்.
சர்வதேச பொருளாதாரத்தை நாம் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால் நமது பொருளாதாரம் சர்வதேச தரத்துக்கு உயர வேண்டும். கடந்த சில நாட்களாக சர்வதேச பொருளாதார தர நிறுவனங்கள் நமது கொள்கைகளை வரிசைப்படுத்தியிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
சமூகக் கொடுமைகளைக் கையாள்வதில் கடுமை தேவை. அவற்றை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும். சமூக ஒற்றுமை இல்லாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி சாத்தியமில்லை. பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு சமூகத்தை வலிமையாக்கிவிடாது. வலிமையான சமூகத்துக்கு சமூக நீதி அடித்தளமாக இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையே தேசத்தின் வளர்ச்சிக்கு திறவுகோல்.
இதைத்தான் மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் கூறியிருக்கின்றனர். அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். இன்று நிகழும் பதற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது ராமானுஜ ஆச்சார்யாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "நன்மையை பின்பற்றிம் அனைவரையும் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் நாம் சரி சமமாக பாவிக்க வேண்டும். சாதியின் அடிப்படையில் யாரையும் அவமரியாதை செய்யக் கூடாது" என அவர் கூறியிருக்கிறார்.
புத்தர், மகாத்மா காந்தி, புனிதர் ராமானுஜ ஆச்சார்யா, அம்பேத்கர், நமது புனித நூல்கள், ஞானிகள், குருக்கள் என அனைவரும் வலியுறுத்துவது சமூக ஒற்றுமையையே. சமூகத்தில் பிளவு ஏற்பட்டால் அரசாங்கம் சிதையும். தீண்டத்தகாதவர்கள், தீண்டக்கூடியவர்கள், உயர் சாதியின, தாழ்ந்த சாதியினர் என ஒரு சமூகம் பிரிந்து கிடக்குமேயானால் அந்த சமூகம் நீடித்திருக்காது.
சமூக கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் போக்கு பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. இத்தகைய சமூக கொடுமைகள் நூற்றாண்டு கடந்து இருந்து கொண்டிருக்கிறது. அவற்றை கடுமையாக கையாள வேண்டும். உணர்வுப்பூர்மான அணுக வேண்டும். மக்களும் அரசாங்கமும் இணைந்து சமூக கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வலுவான சமூகமே வலுவான இந்தியாவுக்கு வழி. வலுவான சமூகத்துக்கு சமூக நீதியே திறவுகோல். அத்தகைய சமூக நீதியை நிலைநாட்டும் கூட்டு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
தலித்துகளையும் பழங்குடிகளையும் பின் தங்கிய சமூகத்தினைரையும் அரவணைத்து தேச முன்னேற்றம் காண்போம்.
திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் தாமதிப்பதை இந்த அரசு விரும்புவதில்லை. எனவேதான் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்றினோம். நேதாஜியின் ஆவணங்களை வெளிப்படுத்தினோம்.
வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம். நமது கலாச்சாரப் பாரம்பரியம் பிறர்க்கு உரிய மரியாதை அளிக்கும் பண்பைக் கொண்டது. பல்வேறு கலாச்சாரங்களையும் உட்கிரகித்துக் கொள்வதே நமது நாகரிகம் உயிர்ப்புடன் இருக்கக் காரணம். எனவே தேசத்தில் வன்முறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் இடமில்லை. தீவிரவாதத்தை இத்தேசம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. மாவோயிஸத்தை அனுமதிக்காது. ஆயுதங்களை ஏந்திய இளைஞர்கள் அதை கைவிடுத்து தேசத்தோடு ஒன்றிணையுங்கள்.
மனித நல்லொழுக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஒரு செய்தி இருக்கிறது. பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இங்குள்ள ஒவ்வொரு பள்ளியும் கண்ணீர் சிந்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருந்தினர். அதுதான் மனித நல்லொழுக்கத்தின் வெளிப்பாடு. ஆனால், மற்றொருபுறம் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். தீவிரவாதிகளை தியாகிகள் என சிலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
நான் நமது அண்டை நாட்டவர்களுக்குச் சொல்வதெல்லாம், நமது போராட்டம் வறுமைக்கு எதிரானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்பதே.
கடந்த சில நாட்களில் பலூசிஸ்தான், கில்கிட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அது இந்தியர்கள் அனைவருக்குமான பெருமை. நான் பதிலுக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை 20% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாம் பேசும்போது ஒரு குறிப்பிட்ட சிலரையே நாம் முன்னிறுத்துகிறோம். ஆனால் அவர்களையும் தாண்டி பலர் நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடி இருக்கின்றனர். நமது ஆதிவாசி சகோதரர்களின் துணிச்சலான போராட்டம் பேசப்படாமல் போய்விட்டது. பிர்சா முண்டாவைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியும். ஆனாலும் இன்னும் நிறைய ஆதிவாசிகளின் சுதந்திர போராட்டம் அறியப்படவில்லை. இனிவருங்காலங்களில் அத்தகைய தேசபக்தி வீர்ர்கள் குறித்த குறிப்புகள் ஆவணப்படுத்தப்படும். அருங்காட்சியங்களில் அவை வைக்கப்படும்.
ஒரே சமூகம், ஒரே பணி, ஒரே இலக்கு என முன்னேறிச் செல்வோம்"
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் சுதந்திர தின உரை 90 நிமிடங்கள் நீடித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago