சிபிஐ விசாரணையை சந்திக்கத் தயார்: மன்மோகன் சிங்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சீனா பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகையில், சிறப்பு விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு இன்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார்.

அப்போது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கேட்டபோது, “நான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல. இது தொடர்பாக சிபிஐ அல்லது வேறு அமைப்போ என்னிடம் ஏதாவது கேட்பதாக இருந்தால், நான் மறைப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.

முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டில் முறைகேடு நடந்ததாக தொழி லதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பி.சி.பரேக் கூறியிருந்தார்.

நிலக்கரிச் சுரங்கத் துறை, பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுவதால், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்க ஒதுக்கீடு மேற்கொண்டதில் பிரதமர் தவறேதும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்த பிரதமர் அலுவலகம், '2005-ம் ஆண்டு நிலக்கரித் துறை அமைச்சகம் எடுத்த முடிவின் அடிப்படையில், கே.எம்.பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்க ஒதுக்கீட்டை பெறத் தகுதியிருப்பதை அறிந்த பின்பே அதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதிலும், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதி லும் சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் எந்தவிதமான இடையூறும் செய்யவில்லை. சட்டப்படி விசாரணை நடைபெறும்' என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE